ராகுல்காந்தி கைதை கண்டித்து காங்கிரசார் சாலைமறியல்-நாமக்கல்லில் நடந்தது
ராகுல்காந்தி கைதை கண்டித்து நாமக்கல்லில் காங்கிரசார் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல்:
காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி மீது அமலாக்கத் துறையினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று நாமக்கல் பூங்கா சாலையில் சத்தியாகிரக போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த போராட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சித்திக் தலைமை தாங்கினார். மாவட்ட முன்னாள் தலைவர்கள் வீ.பி.வீரப்பன், பி.எஸ்.டி.பி.செல்வராஜ் பாச்சல் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நாமகிரிப்பேட்டை ஒன்றிய முன்னாள் தலைவர் புள்ளியப்பன், நகர காங்கிரஸ் தலைவர்கள் மோகன், முரளி, வட்டார காங்கிரஸ் தலைவர்கள் தங்கராஜ், ரகு, இளங்கோ, சக்திவேல், கணேசன், கந்தசாமி, பொதுக்குழு உறுப்பினர் டி.வி. பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சாலைமறியல்
இதனிடையே டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ராகுல்காந்தி எம்.பி. கைது செய்யப்பட்டதாக கட்சியினருக்கு தகவல் கிடைத்தது. இதனால் ஆவேசமடைந்த காங்கிரசார் ராகுல்காந்தி கைதை கண்டித்து எம்.ஜி.ஆர். நுழைவு வாயில் அருகே திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கட்சியினரை துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், இன்ஸ்பெக்டர் சங்கர பாண்டியன் தலைமையிலான போலீசார் தடுத்தனர். மேலும் போக்குவரத்தையும் திருப்பி விட்டனர். இதையடுத்து சிறிது நேரம் ராகுல்காந்தி கைதை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பிய காங்கிரசார் அங்கிருந்து கலைந்து சென்றனர்.