கிருஷ்ணகிரி, ஓசூரில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி, ஓசூரில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி, ஓசூரில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மும்மொழி கல்வி கொள்கை
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை முன்பு கிழக்கு மாவட்ட பா.ஜனதா சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கிழக்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் கே.எஸ்.நரேந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மாநில செயற்குழு உறுப்பினர் முனிராஜ், முன்னாள் மாவட்ட தலைவர்கள் தர்மலிங்கம், ஹரி கோட்டீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் இந்தி மொழியை கற்க அனுமதிக்காமல் எதிர்ப்பதாக தி.மு.க. அரசை கண்டித்தும், தமிழை காக்க தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், பிற மாநிலங்களை போல மும்மொழி கல்வி கொள்கையை அனுமதிக்ககோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட பொதுச்செயலாளர்கள் கோவிந்தராஜி, சங்கர், பொருளாளர் கிருஷ்ணன், பா.ஜனதா பட்டியல் அணி மாவட்ட தலைவர் ரவி, முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஓசூர்
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜனதா கட்சி சார்பில் ஓசூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார். மாநில செய்தி தொடர்பாளரும் முன்னாள் எம்.பி.யுமான நரசிம்மன் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.