திண்டுக்கல்லில் சேதமடைந்த சாலையில் வாழைக்கன்று நட்டு போராட்டம்


திண்டுக்கல்லில் சேதமடைந்த சாலையில் வாழைக்கன்று நட்டு போராட்டம்
x

சேதமடைந்த சாலையில் வாழைக்கன்று நட்டு போராட்டம்பாலகிருஷ்ணாபுரத்தில் சேதமடைந்த சாலையில் வாழைக்கன்று நட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தில் சேதமடைந்த சாலையில் வாழைக்கன்று நட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

வாழைக்கன்று நட்டு போராட்டம்

திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தில் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணி கடந்த 7 ஆண்டுகளாக நடைபெறுகிறது. இதுவரை மேம்பாலம் கட்டி முடிக்கப்படவில்லை. இதற்கிடையே மேம்பால பணிகள் நடைபெறுவதால் அங்குள்ள தார்சாலை சேதம் அடைந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டது. இந்தநிலையில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருவதால் சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்பதோடு, சேறும் சகதியுமாக மாறிவிட்டது.

இதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இன்று அங்கு வாழைக்கன்று நடும் போராட்டம் நடந்தது. இதற்கு முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தலைமை தாங்கினார். இதில் சேறும், சகதியுமாக காட்சி அளித்த சாலையில் வாழைக்கன்றுகளை நட்டனர். அப்போது மேம்பாலத்தை விரைவாக கட்டி முடிக்க வேண்டும். அதுவரை மக்கள் பயன்படுத்த வசதியாக சாலையை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர்.

மீன்பிடித்து எதிர்ப்பு

அதேபோல் திண்டுக்கல் வேடப்பட்டியில் ரெயில் பாதையில் ஒத்தக்கண் பாலம் உள்ளது. இந்த பாலத்தின் வழியாக வேடப்பட்டி, வெள்ளோடு மக்கள் சென்று வருகின்றனர். இந்த நிலையில் தொடர் மழையால் வேடப்பட்டியில் உள்ள குளம் நிரம்பியதால், ஒத்தக்கண் பாலத்தின் வழியாக மழைநீர் செல்கிறது. மேலும் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் ஒத்தக்கண் பாலத்தில் முழங்கால் அளவுக்கு மழைநீர் செல்கிறது. இதனால் பொதுமக்கள் அந்த வழியாக நடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.

இதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மீன் பிடிக்கும் போராட்டம் நடைபெற்றது. இதற்கு 35-வது வார்டு கவுன்சிலர் ஜோதிபாசு தலைமை தாங்கினார். அப்போது தூண்டில் மற்றும் சேலையால் மீன் பிடிப்பது போன்று போராட்டம் நடத்தினர். மேலும் மழைநீர் தேங்காமல் செல்ல உரிய நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் நகர செயலாளர் ஆசாத், மாதர் சங்க நிர்வாகி ராணி, கவுன்சிலர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story