இலங்கை தமிழர்கள் முற்றுகை போராட்டம்
மண்டபம் முகாம் தனித்துணை ஆட்சியரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி அகதிகள் முகாம் வாசல் முன்பு 2-வது நாளாக இலங்கை தமிழர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
பனைக்குளம்,
மண்டபம் முகாம் தனித்துணை ஆட்சியரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி அகதிகள் முகாம் வாசல் முன்பு 2-வது நாளாக இலங்கை தமிழர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
2-வது நாளாக போராட்டம்
மண்டபம் அருகே உள்ளது மண்டபம் அகதிகள் முகாம். இலங்கையிலிருந்து வரும் அகதிகள் முதலில் மண்டபம் அகதிகள் முகாமில் உள்ள தனித்துணை ஆட்சியர் அலுவலகத்தில் பதிவு செய்த பின்னரே மண்டபம் முகாம் அல்லது தமிழகத்தில் உள்ள மற்ற முகாம்களில் தங்க வைப்பதற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். தற்போது மண்டபம் அகதிகள் முகாமில் 1500-க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மண்டபம் அகதிகள் முகாமில் உள்ள தனித்துணை ஆட்சியர் தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் அனைத்து அரசின் சலுகைகளுக்கும் லஞ்சம் கேட்பதாகவும், அரசின் சலுகைகள் முகாமில் உள்ள தமிழர்களுக்கு முழுமையாக கிடைக்கவில்லை எனவும், அகதிகளை அடிமைகள் போல் நடத்துவதாகவும் கூறி நேற்று 2-வது நாளாக மண்டபம் அகதிகள் முகாம் வாசலின் முன்பு அமர்ந்து ஏராளமான இலங்கை தமிழர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமமூர்த்தியும் கலந்துகொண்டார்.
பேச்சுவார்த்தை
மதியம் 3 மணியிலிருந்து 5 மணி வரையிலும் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது. இதனிடையே போராட்டம் நடத்திய இலங்கை தமிழர்களுடன் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு மற்றும் தாசில்தார் சுரேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் போராட்டம் நடத்திய இலங்கை தமிழர்கள் மண்டபம் முகாம் தனித் துணை ஆட்சியரை இடம் மாற்றம் செய்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என கூறி தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து மாவட்ட வருவாய் அதிகாரி காமாட்சி கணேசன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது உங்கள் கோரிக்கை குறித்து மாவட்ட கலெக்டர் மூலமாக சரி செய்யப்படும். அதனால் போராட்டத்தை கைவிடுங்கள் என கேட்டுக் கொண்டார். அதன்பின்னர் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.