புதிய உரிமைகள் சட்டத்தை அமல்படுத்தக்கோரி தர்மபுரியில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்


புதிய உரிமைகள் சட்டத்தை அமல்படுத்தக்கோரி தர்மபுரியில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 Dec 2022 6:45 PM GMT (Updated: 1 Dec 2022 6:46 PM GMT)
தர்மபுரி

தர்மபுரி:

புதிய உரிமைகள் சட்டத்தை முழுமையாக அமல்படுத்தக்கோரி தர்மபுரியில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைக்கான சங்க மாவட்ட தலைவர் கருவூரான் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் தமிழ்ச்செல்வி, மாவட்ட செயலாளர் மாரிமுத்து, நிர்வாகிகள் கோவிந்தசாமி, செந்தில், கிருஷ்ணன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். மத்திய அரசு மாற்றுத்திறனாளிகளின் நலன் மற்றும் மேம்பாட்டுக்காக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை பாதுகாப்பதற்காக புதிய உரிமைகள் சட்டம் 2016-ஐ காலதாமதம் இல்லாமல் அமல்படுத்த வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உதவித்தொகை

மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு நலத்திட்ட உதவிகள் காலதாமதம் இன்றி உரிய நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். விண்ணப்பித்து காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை விரைவாக வழங்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் தகுதி உடையவர்களுக்கு விரைவாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story