நாமக்கல்லில்சாலை பணியாளர்கள் தலையில் முக்காடு அணிந்து ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில், மோகனூர் சாலையில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத்தின் கோட்ட தலைவர் வேலு தலைமை தாங்கினார். செயலாளர் பழனிசாமி ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகள் குறித்து பேசினார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன் கலந்து கொண்டு பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் சாலை பணியாளர்கள் தலையில் முக்காடு அணிந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அப்போது சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பனிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். காலியாக உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாலை பராமரிப்பு பணியிடங்களில் கிராமப்புற இளைஞர்களுக்கு சாலை பணியாளராக பணி வழங்க வேண்டும். சாலை பணியாளர்களுக்கு ஊதியத்தில் 10 சதவீதம் ஆபத்துபடி, நிரந்தர பயணப்படியை வழங்க வேண்டும் என்பது உள்பட 6 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட இணை செயலாளர் இளங்கோவன், துணைத்தலைவர் இளவேந்தன், செயற்குழு உறுப்பினர் தனசேகரன் மற்றும் சாலை பணியாளர் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் மயில்சாமி நன்றி கூறினார்.