சிப்காட் அமைக்க எதிர்ப்பு:விவசாய முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம்


சிப்காட் அமைக்க எதிர்ப்பு:விவசாய முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 March 2023 12:30 AM IST (Updated: 7 March 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

நாமக்கல்:

வளையப்பட்டி, அரூர் உள்ளிட்ட பகுதிகளில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாய முன்னேற்ற கழகம் சார்பில் நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

சிப்காட் அமைக்க ஆய்வு

நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுகா வளையப்பட்டி, பரளி, அரூர், என்.புதுப்பட்டி, லத்துவாடி ஆகிய கிராம ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் தமிழக அரசு தொழில் துறையின் மூலம் சிப்காட் (தொழிற்பேட்டை) அமைக்க நிலம் எடுக்க ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சிப்காட்டிற்காக ஆய்வு செய்யும் பகுதி மலைகளும், கரடுமுரடான பகுதிகளாக உள்ளன. சமவெளி பகுதிகள் இல்லாத பகுதி. இந்த மலைப்பகுதியில் இருந்து தான், மழைக்காலங்களில் நீர்வடிந்து கால்வாய்கள் மூலம் பெரிய ஏரிகளுக்கு நீர் செல்கிறது. இது சுற்றுப்புற பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர காரணமாக உள்ளது.

ஆர்ப்பாட்டம்

கஸ்தூரிமான் மலைக்காட்டில் இருந்து பல வாய்க்கால்களில் தண்ணீர் பிரிந்து செல்கிறது. சிப்காட் அமையும் பட்சத்தில் தண்ணீர் செல்லும் அனைத்து இடங்களும் அடைபட்டு நீர்வழிப்பாதை முற்றிலும் சேதம் அடைவதற்கு வாய்ப்பாக அமையும். இவற்றை கருத்தில் கொண்டு சிப்காட் அமைப்பதை தடை செய்யக்கோரி விவசாய முன்னேற்ற கழகம் சார்பில் நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

விவசாய முன்னேற்ற கழக மாநில பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் சுப்ரமணியன், தலைமை நிலைய செயலாளர் மாதேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது விவசாயிகளின் வாழ்வாதாரம், விளை பொருட்கள் உற்பத்தி பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு சிப்காட் அமைக்க நிலம் கையகப்படுத்துவதை நிறுத்தகோரியும், இப்பகுதியில் சிப்காட் அமைக்க வேண்டாம் என வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். இதில் விவசாய முன்னேற்ற கழக நிர்வாகிகள், விவசாயிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

1 More update

Next Story