ஆண்டிப்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் தி.மு.க. மாவட்ட கவுன்சிலர், ஊராட்சி தலைவருடன் பொதுமக்கள் தர்ணா
வடிகால் திட்டப்பணிக்கு அனுமதி ஆணை வழங்கக்கோரி ஆண்டிப்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் தி.மு.க. மாவட்ட கவுன்சிலர், ஊராட்சி தலைவருடன் பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
வடிகால் திட்டப்பணிக்கு அனுமதி ஆணை வழங்கக்கோரி ஆண்டிப்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் தி.மு.க. மாவட்ட கவுன்சிலர், ஊராட்சி தலைவருடன் பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
குடிநீரில் கலந்த கழிவுநீர்
ஆண்டிப்பட்டி அருகே டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சத்யாநகரில் புதிதாக வடிகால் கட்ட ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து முதல்கட்டமாக சத்யாநகரில் வடிகால் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் வடிகால் கட்டுவதற்கான அரசு அனுமதி ஆணை இதுவரை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வடிகால் அமைக்கும் பணிகளை தொடங்க முடியாத நிலை உள்ளது.
இதற்கிடையே வடிகாலுக்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் கழிவுநீர் தேங்கியது. வடிகாலுக்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் குடிநீர் குழாய் செல்கிறது. இதனால் பள்ளத்தில் தேங்கிய கழிவுநீர், குடிநீர் குழாயில் கலந்து, அப்பகுதியில் சுகாதாரமற்ற குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இதனால் துர்நாற்றத்துடன் குடிநீர் வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இதுகுறித்து அப்பகுதி மக்கள் டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சியில் முறையிட்டனர்.
மாவட்ட கவுன்சிலர் தர்ணா
இந்தநிலையில் சத்யாநகர் வடிகால் கட்டும் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல நாட்கள் ஆகியும் பணி ஆணை வழங்காததை கண்டித்து டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சி தலைவர் வேல்மணிபாண்டியன், தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் பாண்டியன் ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் நேற்று ஆண்டிப்பட்டி ஒன்றிய அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அப்போது அவர்கள் ஒன்றிய அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், ஆண்டிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுல்தான் பாட்ஷா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலகிருஷ்ணன், மலர்விழி ஆகியோர் தர்ணாவில் ஈடுபட்ட மாவட்ட கவுன்சிலர், ஊராட்சி தலைவர் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் முருகன் தலைமையில் நாளை (திங்கட்கிழமை) இந்த பிரச்சினை தொடர்பாக பேசி, அனுமதி ஆணை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். அதைத்தொடர்ந்து தர்ணா போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் ஆண்டிப்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.