நாமக்கல் மாவட்டம் முழுவதும் வருவாய்த்துறை அலுவலர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று வருவாய்த்துறை அலுவலர்கள் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் தாசில்தார் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
பதவி உயர்வு
தொடர்ந்து 4 ஆண்டுகளாக வெளியிடப்படாமல் உள்ள துணை கலெக்டர் பட்டியலை வெளியிட்டு, பதவி உயர்வு வழங்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் துணை தாசில்தார் உள்ளிட்ட பட்டியல்கள் திருத்தத்தின் காரணமாக பணி இறக்கம் செய்யப்பட்ட அலுவலர்களின் பாதிப்புகளை தவிர்த்து பதவி உயர்வினை உறுதி செய்து, உரிய ஆணைகள் வெளியிட வேண்டும். அலுவலக உதவியாளர் காலியிடங்களை நிரப்ப வருவாய் நிர்வாக ஆணையர் ஒப்புதல் வழங்க வேண்டும்.
பல ஆண்டுகளாக தாமதம் செய்யப்படும் இளநிலை, முதுநிலை வருவாய் ஆய்வாளர்களின் பெயர் மாற்றம் விதித்திருந்த அரசாணையை உடன் வழங்க வேண்டும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைத்து கோரிக்கைகளின் மீதும் உரிய காலக்கெடுவிற்குள் ஆணைகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் மாநிலம் முழுவதும் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தற்செயல் விடுப்பு போராட்டம்
நாமக்கல் மாவட்டத்திலும் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெற்றது. வருவாய்த்துறை அலுவலர்களில் துணை தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், தட்டச்சர், அலுவலக உதவியாளர் என சுமார் 130 பேர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதனால் நாமக்கல், ராசிபுரம், பரமத்திவேலூர், திருச்செங்கோடு உள்ளிட்ட தாசில்தார் அலுவலகங்கள் நேற்று வெறிச்சோடி காணப்பட்டன. இந்த போராட்டம் காரணமாக வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் வழங்கும் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டன.






