சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அரசு அலுவலகத்தில் கால்நடைகளை ஒப்படைக்கும் போராட்டம்

மோகனூர்:
சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வளையப்பட்டி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் கால்நடைகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிப்காட் அமைக்க எதிர்ப்பு
நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வளையப்பட்டி, என்.புதுப்பட்டி, லத்துவாடி, பரளி, அரூர் ஆகிய ஊராட்சி பகுதிகளில் தமிழக அரசு சிப்காட் அமைப்பதற்கு முயற்சி செய்து வருகிறது. இந்த பகுதிகளில் விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள மேய்ச்சல் புறம்போக்கு நிலம் மற்றும் பட்டா நிலங்களை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்டங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் சிப்காட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று வளையப்பட்டி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் கால்நடைகளை ஒப்படைக்கும் போராட்டம் நடத்தப்பட்டது.
பரபரப்பு
இதற்கு விவசாய முன்னேற்ற கழக மாநில பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணி தலைமை தாங்கினார். சிப்காட் ஒருங்கிணைப்பு குழு தலைவர் ராம்குமார், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மோகனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார், கிழக்கு ஒன்றிய தலைமை நிலைய செயலாளர் மணி குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து விவசாயிகள் தங்களது ஆடு, மாடுகளை வருவாய் அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். அப்போது வருவாய் அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது. இதனால் அந்த அலுவலகம் முன்பு விவசாயிகள் கால்நடைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், சிப்காட் அமைக்கப்பட்டால் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்க்க இயலாது. மேலும் விவசாய நிலங்களும் பறிபோகும். இதனால் சிப்காட் அமைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்று தெரிவித்தனர்.
தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.






