வெண்ணந்தூர், பரமத்திவேலூரில் காங்கிரசார் திடீர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்:
வெண்ணந்தூர், பரமத்திவேலூரில் காங்கிரசார் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராகுல்காந்திக்கு சிறை
பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி எம்.பி.க்கு குஜராத் மாநிலம் சூரத் கோர்ட்டு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று மாலை காமராஜர் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு வட்டார தலைவர் சிங்காரம் தலைமை தாங்கினார். இதில் துணைத்தலைவர் காசி பெருமாள், செயலாளர் வெங்கடாசலம் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
பரமத்திவேலூர்
ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பரமத்திவேலூர் தொகுதி காங்கிரஸ் சார்பில் பரமத்திவேலூர் காமராஜர் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதற்கு பரமத்தி வட்டார காங்கிரஸ் தலைவர் சந்திரன் தலைமை தாங்கினார். பரமத்திவேலூர் நகர தலைவர் பெரியசாமி வரவேற்றார்.
இதில் மோகனூர் வட்டார தலைவர் குப்புசாமி, மாவட்ட துணைத்தலைவர் காந்தி, மாவட்ட துணை செயலாளர் மணி, மாநில பொதுக்குழு உறுப்பினர் பரமசிவம் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு, கோஷங்களை எழுப்பினர்.






