நாமக்கல்லில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்-பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை

நாமக்கல்:
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி நாமக்கல்லில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் பூங்கா சாலையில் ஜாக்டோ-ஜியோ சார்பில் மனித சங்கிலி, ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ராஜேந்திர பிரசாத், பழனியப்பன், சங்கர் ஆகியோர் தலைமை தாங்கினர். ஒருங்கிணைப்பாளர்கள் முருக செல்வராஜ், ராமு ஆகியோர் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர்.
அதைத்தொடர்ந்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக் கோரியும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
காலிப்பணியிடங்கள்
அதேபோல் அரசுத்துறைகளில் காலியாக உள்ள 6 லட்சம் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மேலும் அரசாணை எண் 115, 139 மற்றும் 152 ஆகியவை இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் வகையில் இருப்பதாகவும், எனவே அவற்றை திரும்ப பெற வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதேபோல் இடைநிலை ஆசிரியர், உயர்நிலை தலைமை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் மற்றும் ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் மட்டுமே ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டும் போன்ற கோரிக்கைகள் அச்சிடப்பட்ட பதாகைகளை கழுத்தில் மாட்டிக்கொண்டு ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.






