பரமத்திவேலூர் வாரச்சந்தை இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துபேரூராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகை


பரமத்திவேலூர் வாரச்சந்தை இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துபேரூராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகை
x
தினத்தந்தி 29 March 2023 6:45 PM GMT (Updated: 29 March 2023 6:45 PM GMT)
நாமக்கல்

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் வாரச்சந்தையை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரூராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டனர்.

வாரச்சந்தை இடமாற்றம்

பரமத்திவேலூர் சந்தை பகுதியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தையில் பரமத்திவேலூர், குப்புச்சிபாளையம், பொய்யேரி, ஒழகூர்பட்டி, படமுடிபாளையம், பொத்தனூர் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகள், பழங்கள் மற்றும் சிறுதானியங்களை விற்பனை செய்து வருகிறார்கள். மேலும் வியாபாரிகளும் மளிகை பொருட்கள் மற்றும் சிறுதானியங்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த வாரச்சந்தையில் விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை. இதனால் பரமத்திவேலூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.1 கோடியே 47 லட்சம் மதிப்பில் வாரச்சந்தை சீரமைக்கப்பட உள்ளது. மேலும் அங்கு 60 கடைகளும் கட்டப்பட உள்ளன. இந்த பணிகள் முடியும் வரை பழைய பஸ் நிலையம் அருகே வாரச்சந்தை இடமாற்றம் செய்யப்பட்டு அங்கு தற்காலிகமாக செயல்படும் என்று பேரூராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

குற்றச்சாட்டு

இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் வாரச்சந்தையை இடமாற்றம் செய்யக்கூடாது. தற்போது உள்ள இடத்தில் போதுமான வசதிகள் உள்ளதால், அங்கேயே சந்தை தொடர வேண்டும் என்றனர்.

மேலும் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளும், வியாபாரிகளும் பொருட்களை விற்பனை செய்து வரும் நிலையில் 60 கடைகள் மட்டும் கட்டப்பட்டால் இடப்பற்றாக்குறை ஏற்பட்டு வியாபாரம் பாதிக்கப்படும் என்றும், இதனால் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழல் ஏற்படும் என்றும் குற்றம்சாட்டினர்.

பரபரப்பு

போராட்டம் குறித்து தகவல் அறிந்த பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமார் வியாபாரிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், தற்போதைய சந்தை பகுதி அனைத்து வசதிகளுடனும், கான்கிரீட் மேற்கூரைகள், தளங்கள் அமைக்கப்பட்டு சீரமைக்கப்படும். மேலும் அங்கு அனைவருக்கும் கடைகள் ஒதுக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்ட பகுதியிலும் அனைவருக்கும் இடம் ஒதுக்கி தரப்படும் என்றும் கூறினார். இதில் வியாபாரிகள் சமாதானம் அடைந்து, போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். பேரூராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


Next Story