ஜேடர்பாளையத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ஜேடர்பாளையத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 April 2023 12:15 AM IST (Updated: 25 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

பரமத்திவேலூர்:

ஆடு மேய்க்க சென்ற பெண்ணை கொலை செய்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றக்கோரி ஜேடர்பாளையத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெண் கொலை

ஜேடர்பாளையம் அருகே வி.கரப்பாளையத்தை சேர்ந்தவர் விவேகானந்தன். இவருடைய மனைவி நித்யா. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் கடந்த மார்ச் மாதம் 11-ந் தேதி நித்யா அந்த பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது கருவேலங்காடு நீரோடை பகுதியில் அவர் பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

இந்தநிலையில் நித்யா கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை போலீசார் கைது செய்யவில்லை. இந்த வழக்கில் போலீசாரின் விசாரணையில் சந்தேகம் உள்ளது. நித்யா கொலை செய்யப்பட்ட பகுதியில் மீன் பிடிக்க வந்தவர்களிடம் முறையாக விசாரணை நடத்தவில்லை. மேலும் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும்

ஜேடர்பாளையம் 4 ரோடு பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பெருமாள் தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட குழு உறுப்பினர் தங்கமணி கண்டன உரையாற்றினார்.

ஜேடர்பாளையத்தில் போலீசாரின் கண்காணிப்பு இருந்தும், குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. விவசாய நிலங்களில் பணிகளில் ஈடுபடும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். நித்யா திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த வழக்கை ஜேடர்பாளையம் போலீசார் விசாரிக்காமல், சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.


Next Story