அத்தனூர் பேரூராட்சியில் குடிநீர் வழங்காததை கண்டித்து பா.ஜனதா ஆர்ப்பாட்டம்
வெண்ணந்தூர்:
வெண்ணந்தூர் அருகே உள்ள அத்தனூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இவற்றில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக அவர்களுக்கு முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்தநிலையில் குடிநீர் வழங்காததை கண்டித்தும், முறையாக குடிநீர் வினியோகிக்க வலியுறுத்தியும், அத்தனூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு நேற்று பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் அருள் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி கலந்து கொண்டு, கண்டனம் தெரிவித்து பேசினார். இதில் மாவட்ட செயலாளர் தமிழரசு, திவ்யா, ஒன்றிய பொதுச் செயலாளர் வெங்கடேஷ், நடராஜ், ஒன்றிய பொருளாளர் கோபால், கண்ணன் மற்றும் நிர்வாகிகள் வெங்கடாசலம், கலைமணி, தங்கமணி, பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு, குடிநீர் வழங்கக்கோரி கோஷங்களை எழுப்பினர்.