பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி சென்னை கோட்டை முன்பு ஆர்ப்பாட்டம்-தமிழக விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்


பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி சென்னை கோட்டை முன்பு ஆர்ப்பாட்டம்-தமிழக விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 4 May 2023 12:15 AM IST (Updated: 4 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி சென்னை கோட்டை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தமிழக விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆலோசனை கூட்டம்

தமிழக விவசாயிகள் சங்க தர்மபுரி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தர்மபுரி வன்னியர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க மாநில துணைத்தலைவர் கே.எஸ்.ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாநில பொது செயலாளர் கே.சுந்தரம், மாநில செயலாளர் கே.வி.சின்னசாமி, மாநில டிராக்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் மகாராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தர்மபுரி மாவட்ட செயலாளர் சக்திவேல் வரவேற்றார்.

கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் எஸ்.ஏ.சின்னசாமி கலந்து கொண்டு, தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார். பால் உற்பத்தியாளர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக உற்பத்தி செலவு 2 மடங்காக உயர்ந்துள்ள நிலையில், பசும்பால் லிட்டருக்கு ரூ.42-ம், எருமை பால் லிட்டருக்கு ரூ.52-ம் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும்.

ஆர்ப்பாட்டம்

பால் உற்பத்தியாளர்களின் இந்த கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கம், பால் உற்பத்தியாளர்கள் நல சங்கம் மற்றும் பணியாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பில் பல கட்ட போராட்டங்கள் நடத்தியும், தமிழக அரசு இதுவரை நடவடிக்கை எடுக்காமல் விவசாயிகளின் கோரிக்கைகளை அலட்சியப்படுத்துவதுடன், ஆவின் நிறுவனத்தை முடக்க நினைக்கும் முடிவை உடனே கைவிட வேண்டும்.

பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி சென்னை கோட்டை முன்பு வருகிற 26-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தர்மபுரி மாவட்டத்தில் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

இதில் தமிழக விவசாயிகள் சங்க தர்மபுரி மாவட்ட நிர்வாகிகள் அண்ணாமலை, வெங்கடேசன், நாகராஜ், முனிராஜ், சுப்பிரமணி, லோகநாதன், கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் மாது, மணி, விஸ்வநாதன், சேலம் மாவட்ட செயலாளர் பெரியண்ணன், திருச்சி மாவட்ட செயலாளர் கணேசன், நிர்வாகி மாதப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story