தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் உண்ணாவிரதம்


தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 26 May 2023 6:45 PM GMT (Updated: 26 May 2023 6:46 PM GMT)
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உண்ணாவிரத போராட்டம்

தர்மபுரி மண்டல தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு சங்க நிர்வாகிகள் தர்மபுரி மாது, சேலம் ராமாயி, கிருஷ்ணகிரி தமிழரசி, திருவண்ணாமலை செல்வி ஆகியோர் தலைமை தாங்கினர். முன்னாள் மாநில தலைவர் சிவப்பிரகாசம் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து பேசினார்.

நிர்வாகிகள் செல்வம், சேரலாதன், கந்தசாமி, செல்வி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். முடக்கப்பட்ட ஒப்படைப்பு விடுப்பை மீண்டும் வழங்க வேண்டும். அகவிலைப்படி உயர்வு நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும்.

பணிக்கொடை

பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியர்களுக்கே வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும். காப்பீடு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் சம்பளம் வழங்க வேண்டும். எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தில் உள்ள பணியாளர்களை பணி நிரந்தம் செய்ய வேண்டும்.

புதிய பென்சன் திட்ட ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. அரசு ஊழியர்கள் சங்க மாநில தலைவர் தமிழ் செல்வி உன்ணாவிரதத்தை முடித்து வைத்து பேசினார். இதில் நிர்வாகிகள் சந்திரசேகரன், ரகுநாதன், ஜெயந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story