கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு: 6-வது நாளாக விவசாயிகள் தொடர் உண்ணாவிரதம் பெருந்துறை, சென்னிமலை, கோபியில் கடையடைப்பு


கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு: 6-வது நாளாக விவசாயிகள்  தொடர் உண்ணாவிரதம் பெருந்துறை, சென்னிமலை, கோபியில் கடையடைப்பு
x

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 6-வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தனர். பெருந்துறை, சென்னிமலை, கோபியில் கடைகள் அடைக்கப்பட்டன.

ஈரோடு

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 6-வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தனர். பெருந்துறை, சென்னிமலை, கோபியில் கடைகள் அடைக்கப்பட்டன.

விவசாயிகள் உண்ணாவிரதம்

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க கூடாது என்று விவசாயிகளில் ஒரு தரப்பினர் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பெருந்துறை அருகே பந்தல் அமைத்து உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நேற்று 6-வது நாளாகவும் உண்ணாவிரதம் தொடர்ந்து நடந்தது. பல்வேறு அரசியல் கட்சியினர் உண்ணாவிரதம் இருப்பவர்களை நேரில் சந்தித்து தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

கடைகள் அடைப்பு

இந்தநிலையில் விவசாயிகளின் உண்ணாவிரத போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பெருந்துறை தினசரி மார்க்கெட் நேற்று முழுமையாக மூடப்பட்டிருந்தது. நகரில் உள்ள உணவகங்கள், பேக்கரிகள், மளிகை கடைகள், ஜவுளிக்கடைகள், மின்சாதன விற்பனைக்கடைகள், சிகை அலங்கார கடைகள், போட்டோ ஸ்டுடியோக்கள், இரும்பு- சிமெண்டு வியாபார நிறுவனங்கள் என பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

இதேபோல் காஞ்சிக்கோவில், பெத்தாம்பாளையம், நல்லாம்பட்டி பேரூராட்சி பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

பஸ்கள் ஓடின

திங்களூர், விஜயமங்கலம் பகுதியில் கடைகள் அடைக்கப்படவில்லை. பெருந்துறையையொட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள உணவகங்கள், பேக்கரி கடைகள், பால் கடைகள், மருந்து கடைகள், பெட்ரோல் பங்குகள் திறந்து இருந்தன.

பஸ் நிலையத்தில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டு இருந்தாலும் அனைத்து ஊர்களுக்கும் செல்லும் பஸ்களும் பஸ் நிலையத்திற்குள் வந்து, பயணிகளை ஏற்றி இறக்கி சென்றன.

விசைத்தறிகள் இயங்கவில்லை

சென்னிமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. மளிகை கடைகள், டீ கடைகள், விசைத்தறி கூடங்கள், பின்னலாடை நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. சென்னிமலை பஸ் நிலையம், காங்கேயம் ரோடு, குமரன் சதுக்கம், ஊத்துக்குளி ரோடு ஆகிய பகுதிகள் வெறிச்சோடி கிடந்தன. மருந்து கடைகள் மற்றும் பால் கடைகள் மட்டும் வழக்கம்போல் செயல்பட்டன.

கோபி

கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கம் சார்பில் பெருந்துறையில் நடைபெற்று வரும் உண்ணாவிரத போராட்டத்திற்கு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் ஆதரவு தெரிவித்து கோபி அருகே உள்ள அளுக்குளி, கரட்டுப்பாளையம் ஊராட்சிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.


Related Tags :
Next Story