கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தடுப்பு சுவர் அமைக்க எதிர்ப்பு: சிவகிரியில் 2-வது நாளாக விவசாயிகள் போராட்டம்


கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தடுப்பு சுவர் அமைக்க எதிர்ப்பு: சிவகிரியில் 2-வது நாளாக விவசாயிகள் போராட்டம்
x

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க சுவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சிவகிரியில் 2-வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு

சிவகிரி

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க சுவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சிவகிரியில் 2-வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தடுப்பு சுவர்

சிவகிரி அருகே உள்ள மாரப்பன்பாளையம் கன்னிமார் தோட்டம் பகுதியில் கீழ்பவானி வாய்க்கால் கரையில் 200 மீட்டர் தூரத்துக்கு கான்கிரீட் தடுப்பு சுவர்தளம் அமைக்க கடந்த சில மாதங்களுக்கு முன்பு அஸ்திவாரம் தோண்டப்பட்டது. அப்போது அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள், ஒன்று திரண்டு கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தடுப்பு சுவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கான்கிரீட் தடுப்பு சுவர் அமைக்கும் பணி கைவிடப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் கான்கிரீட் தடுப்பு சுவர் அமைக்கும் பணி தொடங்கியது. இதுகுறித்த தகவல் கிடைத்ததும் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஒன்று திரண்டு வந்து கான்கிரீட் தடுப்பு சுவர் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து பணியை தடுத்ததாக 20 விவசாயிகள் கைது செய்யப்பட்டு மாலையில் விடுதலை செய்யப்பட்டனர். இதனிடையே பணிகள் தொடர்ந்து நடைபெற்றது.

2-வது நாளாக...

இந்த நிலையில் 2-வது நாளாக நேற்று மீண்டும் கன்னிமார் தோட்டம் பகுதிக்கு ஆண்கள், பெண்கள் என 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்று திரண்டு வந்து கான்கிரீட் தடுப்பு சுவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்த தகவல் கிடைத்ததும், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் ஜெயபிரகாஷ், ஈரோடு டவுன் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆறுமுகம், பெருந்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெயபாலன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில், 'வாய்க்காலில் 60 மீட்டர் தூரத்துக்கு மட்டும் கான்கிரீட் தடுப்பு சுவர் அமைப்பது எனவும், மீதம் உள்ள 140 மீட்டர் அஸ்திவாரம் தோண்டப்பட்ட பகுதியை மண்ணை கொண்டு மூடிவிடுவது,' எனவும் முடிவு செய்யப்பட்டது. இதில் சமாதானம் அடைந்த விவசாயிகள் தங்களுடைய போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story