சோனியாகாந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிர்ப்பு: சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்


சோனியாகாந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிர்ப்பு: சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்
x

சோனியாகாந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடந்தது. இதில் ஈடுபட்ட கே.எஸ்.அழகிரி உள்பட 250 பேர் கைதாகி விடுதலை செய்யப்பட்டனர்.

சென்னை,

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பான விசாரணைக்கு அமலாக்கத்துறை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு சம்மன் அனுப்பியது. இதனையடுத்து அவரிடம் நேற்று விசாரணை நடந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார். இதில் முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், துணைத்தலைவர்கள் பொன்.கிருஷ்ணமூர்த்தி, கோபண்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, பொருளாளர் ரூபி மனோகரன், பொதுச்செயலாளர்கள் காண்டீபன், தளபதி எஸ்.பாஸ்கர், ஆர்.டி.ஐ. பிரிவு துணைத் தலைவர் மயிலை தரணி, மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் உள்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தின்போது காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷாவின் படம் வைத்த உருவ பொம்மையை ஊர்வலமாக தூக்கி வந்து எரிக்க முயற்சித்தனர். ஆனால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்கள் போராட்டம் நடைபெற்ற பகுதியில் இருந்து சற்று தூரத்தில் வைத்து அதை எரித்தனர்.

மிரட்ட முடியாது

போராட்டத்தில் சோனியாகாந்தி மீதான வழக்கு விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளும், முக்கிய தலைவர்களும் பேசினர். பின்னர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது:-

நேஷனல் ஹெரால்டு இன்று வரை காங்கிரஸ் கட்சியின் சொத்தாகவே இருக்கிறது. சோனியாகாந்தி, ராகுல்காந்தி உள்பட காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பெயரில் அந்த சொத்து உள்ளது. ஒரு விஷயத்தை திரும்ப திரும்ப சொன்னால் மக்கள் மனதில் பதிந்துவிடும் என்ற எண்ணத்தில், இந்த வழக்கு விசாரணையை மத்திய பா.ஜ.க. அரசு செய்கிறது. காங்கிரஸ் கட்சியை மிரட்டி பார்க்க முடியாது. ஆங்கிலேயர்களால் கூட ஒன்றும் செய்ய முடியாத காங்கிரஸ் கட்சியை, பா.ஜனதா எதுவும் செய்ய முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

250 பேர் கைது

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட கே.எஸ்.அழகிரி உள்பட 250 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.


Next Story