அரசு பஸ் வராததை கண்டித்து போராட்டம்
காரியாபட்டி அருகே அரசு பஸ் வராததை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.
காரியாபட்டி,
காரியாபட்டி அருகே அரசு பஸ் வராததை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.
அரசு பஸ்
காரியாபட்டி அருகே சுந்தரங்குண்டு கிராமத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ- மாணவிகள் காரியாபட்டியில் படித்து வருகின்றனர். இவர்கள் பள்ளிக்கு சென்று வர வசதியாக மதுரை பெரியார் பஸ் நிலையத்திலிருந்து காரியாபட்டி வழியாக இலுப்பைகுளம் மற்றும் சுந்தரங்குண்டு ஊருக்குள் சென்று வர அரசு பஸ் காலை 7.30 மணி மற்றும் மாலை 4.30 மணியளவில் இயக்கப்பட்டது.
காலை 7.30 மணி அளவில் சுந்தரங்குண்டு ஊருக்குள் வரவேண்டிய அரசு பஸ் கடந்த சில நாட்களாக வராமல் இருந்துள்ளது. இதனால் ஊரில் இருந்து 3 கி.மீ. தூரம் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
சாலை மறியல்
இதனால் ஆத்திரமடைந்த சுந்தரங்குண்டு கிராம பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகளுடன் சேர்ந்து மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து இலுப்பைகுளம் ஊருக்கு சென்று திரும்பிய அரசு பஸ்சை மறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கள்ளிக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையின் பிறகு போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனால் காரியாபட்டி - கள்ளிக்குடி சாலையில் 1 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.