விவசாய நிலங்களில் மின் இணைப்பை துண்டிக்க எதிர்ப்பு: பொள்ளாச்சியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


விவசாய நிலங்களில் மின் இணைப்பை துண்டிக்க எதிர்ப்பு:  பொள்ளாச்சியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Dec 2022 12:15 AM IST (Updated: 9 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில் பி.ஏ.பி. கால்வாயின் இருபுறமும் உள்ள விவசாய நிலங்களில் மின் இணைப்பை துண்டிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் பி.ஏ.பி. கால்வாயின் இருபுறமும் உள்ள விவசாய நிலங்களில் மின் இணைப்பை துண்டிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

பி.ஏ.பி. பிரதான கால்வாயின் இருபுறமும் உள்ள விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளின் மின் இணைப்பை துண்டிப்பதை நிறுத்த வேண்டும். தொழிற்சாலைகளாகவும், காற்றாலைகளாகவும் மாறி உள்ள நிலங்களை பாசன திட்டத்தில் இருந்து நீக்கி 3 மண்டலங்களாக மாற்ற வேண்டும். ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கம், உழவர் உழைப்பாளர் கட்சி, கோவை, திருப்பூர் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், ஏர்முனை இளைஞர் அணி சார்பில் பொள்ளாச்சியில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு விவசாயிகள் சங்க தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் சூலுர் எம்.எல்.ஏ. வி.பி.கந்தசாமி, கோவை, திருப்பூர் விவசாயிகள் பாதுகாப்பு சங்க கதிரேசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பாலைவனமாகி விடும்

கோர்ட்டு உத்தரவின் பேரில் அதிகாரிகள் பி.ஏ.பி. கால்வாயின் அருகில் உள்ள மின் இணைப்புகளை வேகமாக துண்டித்து வருகின்றனர். ஆனால் 1967-ம் ஆண்டு போடப்பட்ட சட்டத்தை 50 ஆண்டுகள் கழித்து கையில் எடுத்து பி.ஏ.பி. கால்வாயின் அருகில் உள்ள கிணறுகளில் பொருத்தப்பட்டு உள்ள மின் இணைப்பை துண்டித்து வருகின்றனர். இதை கண்டித்து 2-வது கட்டமாக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சரான மின்சார துறை அமைச்சர் விவசாயிகளை சந்தித்து இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். நிரந்தர தீர்வு காணப்பட்டால் தான் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முடியும்.

கோர்ட்டு உத்தரவு என்கிற போர்வையில் விவசாயிகளின் மின் இணைப்பை துண்டிப்பது போராட்ட களத்திற்கு துண்டுவதாக அமைந்து உள்ளது. தென்னை விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்கிற அடிப்படையில் போராட்டம் நடத்தப்படுகிறது. பி.ஏ.பி. கால்வாயின் ஓரம் விவசாயம் செய்ய கூடிய 50 மீட்டர் தூரம் இருந்த மின் இணைப்பை தான் துண்டித்து வந்தனர். தற்போது 300 மீட்டர் இருந்தாலும் மின் இணைப்பை துண்டிக்கின்றனர். இதனால் தென்னை கருகி பாலைவனமாகி விடும். எனவே மாநில அரசு கவனத்தில் எடுத்துக் கொண்டு மின் இணைப்பு துண்டிப்பதை நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story