விலைவாசி உயர்வை கண்டித்து நூதன போராட்டம்
சேலத்தில் விலைவாசி உயர்வை கண்டித்து நூதன போராட்டம் நடத்தப்பட்டது. தக்காளி, வெங்காயம் மாலை அணிந்து வந்தவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
விலைவாசி உயர்வு
நாடு முழுவதும் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக தக்காளி, சின்ன வெங்காயம், பருப்பு, இஞ்சி உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக்கோரி பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
அதன் அடிப்படையில், விலைவாசி உயர்வை கண்டித்து புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி சார்பில் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ரமணி, வரதராஜன், ஆறுமுகம் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இதில் மாநில செயலாளர் ஜீவானந்தம் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில், அக்கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது, அத்தியாவசிய உணவு பொருட்களின் விலையை கண்டித்தும், விலை உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய, மாநில அரசுகளுக்கும் எதிராகவும், தமிழக மக்களின் நலன்கள், உணர்வுகளுக்கு எதிராக செயல்படும் கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறக்கோரியும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
பால் ஊற்றி போராட்டம்
ஆர்ப்பாட்டத்தின்போது தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறி பொருட்களை சிலர் மாலையாக அணிந்து வந்தும், அந்த பொருட்களை தரையில் வைத்து அதற்கு பால் ஊற்றி நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அத்தியாவசிய உணவுபொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.