பள்ளிக்கூடத்தை மூடுவதற்கு எதிர்ப்பு: பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு
தென்காசி அருகே பள்ளிக்கூடத்தை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடையநல்லூர்:
தென்காசி அருகே இலத்தூரில் அரசு உதவி பெறும் லட்சுமி அரிகர உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்தநிலையில் இந்தப்பள்ளி மூடப்படுவதாகவும், மாணவ-மாணவியர் சேர்க்கை நிறுத்தப்படுவதாகவும் பள்ளியின் முன்பு அறிவிப்பு ஒட்டப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பள்ளிக்கூடம் முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் அச்சன்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்கனி விரைந்து வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தார். அதன் பின்னர் இலத்தூர் பஞ்சாயத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பள்ளியை மூடக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், வரும் கல்வியாண்டில் வழக்கம்போல் மாணவர் சேர்க்கை நடைபெறும். பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றனர்.