செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலையை முற்றுகையிட்டு போராட்டம்


செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலையை முற்றுகையிட்டு போராட்டம்
x

நிலுவை தொகையை வழங்க வலியுறுத்தி செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

செய்யாறு

செய்யாறில் பா.ம.க.வின் தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தினர் கரும்பு விவசாயிகளுக்கு செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை வழங்க வேண்டிய ரூ.32 கோடி நிலுவைத் தொகையை தராமல் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்து ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பா.ம.க மாவட்ட செயலாளர் கனேஷ்குமார், உழவர் பேரியக்க மாநில செயலாளர் வேலுச்சாமி ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் பெண்கள் உள்பட 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.

போராட்டத்தில், 2021-22-ம் பருவ ஆண்டில் ஆலைக்கு அனுப்பிய கரும்புக்கு நிலுவைத்தொகை சுமார் ரூ.32 கோடி கடந்த 5 மாதங்களாக தராமல் விவசாயிகளை அலைக்கழிக்கும் செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்தும், கரும்பு டன்னுக்கு ரூ.5 ஆயிரம் என நிர்ணயம் செய்ய வேண்டும், கரும்பு வெட்டுக் கூலியை ஆலை நிர்வாகமே ஏற்று வழங்க வேண்டும்,

கரும்பு சுமை வண்டிகள் ஆலைக்குள் நுழையும் போதே எடைபோட வசதியாக நுழைவுவாயிலில் எடைமேடை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

அதனைத்தொடர்ந்து போராட்ட குழுவினரில் 10 பேர் ஆலைக்குள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் ஆலையின் நிர்வாக மேலாளர் காமாட்சியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் நிலுவைத்தொகை கிடைக்க அனைத்து ஏற்பாடுகளையும் ஆலை நிர்வாகம் செய்துள்ளதாகவும், 15 தினங்களுக்குள் விவசாயிகளுக்கு நிலுவை தொகை கிடைத்துவிடும் என உறுதியளிக்கப்பட்டது.

அதனை ஏற்ற அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Related Tags :
Next Story