6 பேர் கைதுக்கு எதிர்ப்பு: விசைப்படகு மீனவர்கள் இன்று வேலை நிறுத்தம்
6 மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
ராமேசுவரம்,
ராமேசுவரத்தில் இருந்து நேற்றுமுன்தினம் ஒரு விசைப்படகு மற்றும் 6 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில் ராமேசுவரம் மீன்பிடி டோக்கன் அலுவலகம் முன்பு நேற்று அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்க அவசர ஆலோசனை கூட்டம் மீனவர் சங்கத்தலைவர் எமரிட் தலைமையில் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்தில் மீனவ சங்க பிரதிகள் சேசுராஜா, சகாயம் உள்ளிட்ட ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ராமேசுவரத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற படகுடன் 6 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட ராமேசுவரம் உள்ளிட்ட தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
மேலும் மீனவர்கள் கைது நடவடிக்கையை கண்டித்தும், பாரம்பரிய கடல் பகுதியில் மீனவர்கள் பிரச்சினை இல்லாமல் மீன் பிடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இன்று (திங்கட்கிழமை) ஒருநாள் ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதன் இடையே கூட்டம் முடிந்த பின்னர் மீனவர்கள் அனைவரும் அமர்ந்தபடியே இலங்கை கடற்படையை கண்டித்தும், கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் கோஷமிட்டபடி சிறிது நேரம் கண்டன ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டனர்.