ஊத்துக்கோட்டை அருகே இயற்கை வளங்களை அழித்து வீட்டுமனை வழங்க எதிர்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்


ஊத்துக்கோட்டை அருகே இயற்கை வளங்களை அழித்து வீட்டுமனை வழங்க எதிர்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்
x

ஊத்துக்கோட்டை அருகே இயற்கை வளங்களை அழித்து வீட்டு மனை பட்டா வழங்குவதை எதிர்த்து பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவள்ளூர்

வீட்டுமனை வழங்க எதிர்ப்பு

ஊத்துக்கோட்டை அருகே உள்ள லச்சிவாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பெரம்பூர் மற்றும் பாஞ்சாலி நகர் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் 5½ ஏக்கர் பரப்பளப்பில் தொப்பு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த இடத்தை பஞ்சாயத்து நிர்வாகம் பராமரித்து வருகின்றனர். இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்த தோப்பு புறம்போக்கு நிலத்தில் ஆதிதிராவிட மக்களுக்கு வீட்டுமனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக கடந்த 15-ந் தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் இந்த மாந்தோப்பு புறம்போக்கு நிலத்தில் யாருக்கும் பட்டா வழங்கக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சாலைமறியல்

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வருவாய் துறையினர் இந்த பகுதியில் உள்ள மரங்களை பொக்லைன் எந்திரம் மூலமாக அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு பெரம்பூர் மற்றும் பாஞ்சாலி நகர் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் நேற்று அவர்கள் பெரம்பூரில் ஊத்துக்கோட்டை- பெரியபாளையம் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு தாசில்தார் வசந்தி, துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ்குமார் மற்றும் ஏராளமான போலீசார் அங்கு சென்று இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சமாதானம் செய்தனர். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

சாலை மறியல் காரணமாக அங்கு 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story