திருவாரூர் மாவட்டத்தில் ரெயில் மறியல் உள்பட 10 இடங்களில் போராட்டம்


திருவாரூர் மாவட்டத்தில் ரெயில் மறியல் உள்பட 10 இடங்களில் போராட்டம்
x

திருவாரூர் மாவட்டத்தில் ரெயில் மறியல் உள்பட 10 இடங்களில் போராட்டம்

திருவாரூர்

மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் திருவாரூர் மாவட்டத்தில் ரெயில் மறியல் உள்பட 10 இடங்களில் போராட்டம் நடத்தினர். இதில் 327 பெண்கள் உள்பட 874 பேரை போலீசார் கைது செய்தனர்.

மத்திய அரசின் மக்கள் விேராத கொள்கை

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பொது துறைகளை தனியார் மயமாக்கி கார்ப்பரேட்டர்களிடம் விற்க கூடாது. காண்ட்ராக்ட் அவுட்சோர்சிங் முறைகளை கைவிட வேண்டும். முறைசாரா தொழிலாளர் சமூக பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தது.

ரெயில் மறியல்

அதன்படி நேற்று திருவாரூர் அருகே சிங்களாஞ்சேரி ரெயில்வே கேட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி திருவாரூர், கொரடாச்சேரி ஒன்றிய நகர குழுக்கள் சார்பில் எர்ணாகுளத்தில் இருந்து திருவாரூர் வழியாக காரைக்கால் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட குழு உறுப்பினர்கள் பழனிவேல், தம்புசாமி, செந்தில், நகர செயலாளர் தர்மலிங்கம், ஒன்றிய செயலாளர்கள் இடும்பையன், ஜெயபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரகுராமன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ரெயில் முன்பு தண்டவாள பாதையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

½ மணிநேரம் தாமதம்

அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை, துணை போலீஸ் சூப்பிரண்டு சிவராமன் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் மறியலில் ஈடுபட்ட 50 பெண்கள் உள்பட 130 பேரை கைது செய்தனர். இந்த மறியல் போராட்டத்தினால் எர்ணாகுளம்-காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரெயில் ½ மணி நேரம் காலதாமதமாக புறப்பட்டு சென்றது.

அதேபோல் திருத்துறைப்பூண்டியில் நடந்த ரெயில் மறியல் போராட்டத்தில் 100 பெண்கள் உள்பட 225 பேரை போலீசார் கைது செய்தனர்.

874 பேர் கைது

மன்னார்குடி, நீடாமங்கலம், குடவாசல், கோட்டூர், முத்துப்பேட்டை, எரவாஞ்சேரி, பேரளம், வலங்கைமான் ஆகிய 8 இடங்களில் மத்திய அரசு அலுவலங்கள் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 177 பெண்கள் உள்பட 519 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் முழுவதும் 2 ரெயில் மறியல் உள்பட 10 இடங்களில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 327 பெண்கள் உள்பட 874 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story