தமிழக அரசை கண்டித்து 5 ஆயிரம் இடங்களில் போராட்டம் -அண்ணாமலை பேட்டி


தமிழக அரசை கண்டித்து 5 ஆயிரம் இடங்களில் போராட்டம் -அண்ணாமலை பேட்டி
x

தொடர்ந்து தவறான பாதையில் செல்லும் தமிழக அரசை கண்டித்து 5 ஆயிரம் இடங்களில் பா.ஜ.க. போராட்டம் நடத்தும் என அண்ணாமலை கூறினார்.

சென்னை,

சென்னை எழும்பூரில் தனியார் நிறுவனம் சார்பில் இந்திய அரசியலமைப்பு விழிப்புணர்வு பேரணி நிறைவு விழா நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.

இதில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், 'நரேந்திர மோடி பிரதமரான பின்பு தான் அரசியலமைப்பு சட்ட தினம் கொண்டுவரப்பட்டது. இந்தியாவில் பிரதமராக இருந்து ஒருவர் கூட அதைப்பற்றி யோசிக்கவில்லை' என்றார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பாதுகாப்பு பணியில் இருக்கும் ராணுவ வீரரை அரசியல் கட்சியினர் மிரட்டும் வகையில் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு இருந்து வருகிறது.

5 ஆயிரம் இடங்களில் போராட்டம்

தி.மு.க. அரசு மீது பொதுமக்கள் இடையே இருக்கும் வெறுப்பு ஒவ்வொரு நாளும் வெளிப்பட்டு வருகிறது. தி.மு.க. அரசு தொடர்ந்து தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. தவறான பாதையில் இருந்து தி.மு.க. மாறியதாக தெரியவில்லை.

தமிழக அரசின் இந்த போக்கை கண்டித்து தமிழகத்தில் 5 ஆயிரம் இடங்களில் போராட்டம் நடத்தப்படும். கட்சியை வளர்க்க வேண்டும். மக்களின் அன்பை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பா.ஜ.க. செயல்பட்டு வருகிறது. தி.மு.க. அரசு மீதான மக்கள் கோபத்தின் குரலாக பா.ஜ.க. ஒலிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story