2 பணியாளர்கள் மீதான வழக்கை ரத்து செய்யாவிட்டால் மாநில அளவில் போராட்டம்


2 பணியாளர்கள் மீதான வழக்கை ரத்து செய்யாவிட்டால் மாநில அளவில் போராட்டம்
x

புதுக்கோட்டை தேர் விபத்து தொடர்பாக 2 பணியாளர்கள் மீதான வழக்கை ரத்து செய்யாவிட்டால் மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் எனவும், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் விஸ்வகர்ம பேரவையினர் வலியுறுத்தி உள்ளனர்.

புதுக்கோட்டை

மாதிரி தேரோட்டம்

புதுக்கோட்டை பிரகதாம்பாள் கோவில் தேரோட்டத்தின் போது தேர் கவிழ்ந்தது. தேரோட்டத்தின் போது கட்டை போடும் பணியில் ஈடுபட்ட ராஜேந்திரன், வைரவன் ஆகியோர் மீது திருக்கோகா்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விபத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் அலட்சியம் தான் காரணம் எனவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அகில இந்திய விஸ்வகர்ம பேரவையின் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் செந்தில்குமார், பொருளாளர் ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு மனு அளித்தனர். அதில் கூறியிருந்ததாவது:-

ஆடிப்பூர தேரோட்டம் நடைபெறுவதற்கு முன்னர் மாதிரி தேரோட்டம் நடத்தி உறுதித்தன்மை, பாதுகாப்பு மற்றும் வேறு குறைபாடுகள் இருந்தால் அவற்றினை கண்டறிந்து நிவர்த்தி செய்த பின்னர் தேரோட்டம் நடத்தப்படுவது வழக்கம். மாதிரி தேரோட்டமும் நடத்தி உறுதித்தன்மை, பாதுகாப்பை உறுதி செய்யவில்லை.

அதிகாரிகளின் அலட்சியம்

தேரை பிடித்து இழுக்கும் அசைவுக்கு வெள்ளை, சிவப்பு நிற கொடிகளுடன் ஒருவர் தேரில் இருக்க வேண்டும் என கூறியும், நிர்வாகமும், அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை. தேரை சமதளத்தில் இறக்கி வைக்கப்படுவதற்கு முன்பாகவே உயரமான இடத்தில் இருந்து தேர் இழுக்கப்பட்டதால், வேகமாக கீழே இறங்கி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்திற்கு முழுக்காரணம் கோவில் நிர்வாகிகள், அதிகாரிகளின் அலட்சியத்தாலும், கவனக்குறைவாலும், முன்னேற்பாடு நடவடிக்கைகள் எடுக்காததாலும், விஸ்வகர்மா சமுதாய ஊழியர்களை கலந்து ஆலோசிக்காததாலும் ஏற்பட்ட விபத்து ஆகும்.

மாநில அளவில் போராட்டம்

இந்த விபத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள 2 பேர் மீது பொய்யான குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விபத்திற்கு காரணமான உண்மை குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 2 பேர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்திருந்தனர்.

மேலும் அவர்கள் நிருபர்களிடம் கூறுகையில், '' பணியாளர்கள் மீதான வழக்கை ரத்து செய்யாவிட்டால் மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும். இந்த விபத்திற்கு முழு காரணம் இந்து சமய அறநிலையத்துறையின் செயல் அலுவலர், கோவில் மேற்பார்வையாளர் ஆகியோர் தான். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர். அவர்களது மனுவை பெற்ற போலீசார், போலீஸ் சூப்பிரண்டிடம் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.


Next Story