பேரூராட்சி அலுவலகத்திற்குள் புகுந்து பா.ஜ.க.வினர் போராட்டம்
கோவில் சுற்றுச்சுவரை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து ஆரல்வாய்மொழி பேரூராட்சி அலுவலகத்திற்குள் புகுந்து பா.ஜ.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆரல்வாய்மொழி:
கோவில் சுற்றுச்சுவரை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து ஆரல்வாய்மொழி பேரூராட்சி அலுவலகத்திற்குள் புகுந்து பா.ஜ.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சுற்றுச்சுவர் இடிக்க நோட்டீஸ்
ஆரல்வாய்மொழி பேரூராட்சிக்குட்பட்ட குமாரபுரத்தில் உச்சினிமாகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சமீபத்தில் திருப்பணிகள் நடைபெற்று கும்பாபிஷேகம் நடந்தது. இந்த கோவிலை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டப்பட்டிருந்தது.
இந்த சுற்றுச்சுவர் பஞ்சாயத்து இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பதாக கலெக்டர் அரவிந்த் மற்றும் அதிகாரிகளுக்கு புகார் சென்றது. இதனையடுத்து கலெக்டர் ஆக்கிரமிப்பு சுவரை அகற்ற உத்தரவிட்டுள்ளார்.
மேலும் பேரூராட்சி சார்பில் கோவில் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில் ஆக்கிரமிப்பு சுவரை அகற்ற வேண்டும், இல்லையென்றால் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
பா.ஜ.க. போராட்டம்
இந்தநிலையில் நேற்று கோவில் சுற்றுச்சுவரை இடிக்கக் கூடாது என கூறி பா.ஜ.க.வினர் பொதுமக்கள் சிலருடன் பேரூராட்சி அலுவலகத்திற்குள் புகுந்தனர்.
அங்கு தரையில் அமர்ந்து சுற்றுச்சுவரை அகற்றக்கூடாது என கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் செயல் அலுவலர் ஜோஸ்லின்ராஜிடம் அவர்கள் ஆவேசமாக பேசியதாக தெரிகிறது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் நாகர்கோவில் போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) பாலகிருஷ்ணன், ஆரல்வாய்மொழி இன்ஸ்பெக்டர் கோபி மற்றும் ஏராளமான போலீசார் விரைந்து வந்து பா.ஜ.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
செயல் அலுவலர் புகார்
மேலும் இந்த சம்பவம் குறித்து செயல் அலுவலர் ஜோஸ்லின் ராஜ் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில், குமாரபுரம் பொது தெருவில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக் கூடாது என பா.ஜ.க.வினர் பேரூராட்சி அலுவலத்திற்குள் புகுந்து அலுவலக பணி செய்யவிடாமல் என்னை தடுத்து தகராறு செய்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.