திருத்தணி தாலுகா அலுவலகம் முன்பு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டம்
திருத்தணி தாலுகா அலுவலகம் முன்பு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
இடைக்கால பணிநீக்கம் செய்யப்பட்ட கள்ளக்குறிச்சி தாசில்தார் மனோஜ்முனியன் என்பவரின் இடைக்கால பணி நீக்கத்தை உடனடியாக ரத்து செய்திட வலியுறுத்தி நேற்று திருத்தணி தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்துக்கு, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் திருத்தணி வட்டார தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். இதில் திருத்தணி வட்ட செயலாளர் உதயகுமார், பொருளாளர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இந்தப் போராட்டத்தில் திருத்தணி தாசில்தார் தவிர மற்ற அனைத்து நிலை அலுவலர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். அலுவலர்கள் யாரும் பணிக்கு வராததால் தாலுகா அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் கோரிக்கை மனுக்களோடு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி பொன்னேரி வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று காலை போராட்டம் நடத்தி வந்தனர். பொன்னேரியில் பலத்த மழை பெய்த நிலையிலும், போராட்டத்தில் வருவாய் அலுவலர்கள் நனைந்தபடியே போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.