விவசாயிகளிடம் மனுவாங்க மறுத்ததால் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம்
விவசாயிகளிடம் மனுவாங்க மறுத்ததால் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம்
திருவையாறு புறவழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகளிடம் மனுவாங்க மறுத்ததால் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம் நடத்தினர்.
மனுவை வாங்க மறுப்பு
திருவையாறு புறவழிச்சாலை பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் விவசாயிகளுக்கு கண்டியூர் கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் புறவழிச்சாலை பணிக்கு நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக விசாரணைக்கு அஜராக வேண்டும் என்று கடந்த 10-ந்தேதி கடிதம் வழங்கி ஒப்புதல் பெறப்பட்டது.
நேற்று திருவையாறு கண்டியூரில் புறவழிச்சாலை திட்டத்தை கைவிடக்கோரியும், நிலம் தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கீழதிருப்பந்துருத்தி, கண்டியூர், கல்யாணபுரம் 1-ம் சேத்தி ஆகிய கிராமங்களை சேர்ந்த 35-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கண்டியூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் நில எடுப்பு சிறப்பு ஆர்.டி.ஓ. மணிமேகலை, சிறப்பு தாசில்தார் அனிதா ஆகியோரிடம் கண்டியூர் சிவன் கோவிலில் இருந்து வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு ஊர்வலமாக வந்து மனு கொடுத்தனர். அப்போது அதிகாரிகள் விவசாயிகளிடம் மனுவை வாங்க மறுத்தனர்.
வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம்
இதனால் வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு மனுவுடன் அலுவலகத்தின் உள்ளேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ரசீது வேண்டும் என்றால் பதிவு தபால்மூலம் மனு அனுப்புங்கள் என்று அதிகாரிகள் கூறினர். இதையடுத்து பதிவு தபால் மூலம் மனு அனுப்புவதாக கூறிவிட்டு விவசாயிகள் மனுவை வழங்காமல் அங்கிருந்து திரும்பி சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.