கல் குவாரியை மூடக்கோரி பெண்கள் முதல்-அமைச்சருக்கு மனு அனுப்பும் போராட்டம்

கல் குவாரியை மூடக்கோரி பெண்கள் முதல்-அமைச்சருக்கு மனு அனுப்பும் போராட்டம் நடத்தினர்.
புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரத்தில் கல்குவாரி இயங்கி வருகிறது. இந்த கல் குவாரியால் அந்த பகுதியை சுற்றியுள்ள 8-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதோடு பொதுமக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு வருவதால் உடனடியாக அந்த கல் குவாரியை மூட வேண்டும் என்று கூறி கிராம மக்கள் போராடி வருகின்றனர். பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்த போதிலும், நீதிமன்ற உத்தரவின் பேரில் அந்த கல்குவாரி இயங்கி வருவதால் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த அந்த கிராமத்தின் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று தமிழக முதல்-அமைச்சர் தனி பிரிவிற்கு மனு அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை தலைமை தபால் நிலையத்திலிருந்து பதிவு தபாலில் தமிழக முதல்-அமைச்சருக்கு கல்குவாரியை உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கல்குவாரி இயங்குவதால் ஏற்பட்டுள்ள தீமைகள் குறித்தும் அந்த மனுவில் தெரிவித்து உடனடியாக கல்குவாரியை மூட வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் முன் வைத்துள்ளனர்.