டாஸ்மாக்கடையை இடமாற்ற வலியுறுத்தி போராட்டம்
டாஸ்மாக்கடையை இடமாற்ற வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
ராஜபாளையம்,
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூர் பகுதியில் டாஸ்மாக்கடை செயல்பட்டு வருகிறது. பஸ் நிலையம் அருகே செயல்படுவதால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
எனவே கடையை இடமாற்ற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, தே.மு.தி.க., விடுதலை சிறுத்தைகள், மக்கள் அதிகாரம், புரட்சிகர இளைஞர் முன்னணி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும், விவசாய சங்கத்தை சேர்ந்தவர்களும் நேற்று டாஸ்மாக் கடை எதிரே காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தின் காரணமாக சேத்தூர் பஸ் நிலையம் அருகே பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து உதவி போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சபரிநாதன், ப்ரீத்தி உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கலால் துறை கோட்ட அலுவலர் ராஜா உசேன் பேச்சுவார்த்தை நடத்தினார். வருகிற 16-ந் தேதிக்குள் கடை இடமாற்றம் செய்யப்படும் என உறுதி அளித்ததால் போராட்டம் கை விடப்பட்டது.