நாகை அக்கரை குளத்தை சீரமைக்காவிட்டால் போராட்டம்
தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க நாகை அக்கரை குளத்தை சீரமைக்காவிட்டால் போராட்டம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
நாகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு நகர செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். நாகை நகரில் உள்ள நீர் நிலைகளில் முக்கியமானதாக அக்கரை குளம் உள்ளது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த குளத்தை குளிப்பதற்கும், துணி துவைப்பதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். இது தவிர நகரில் உள்ள ஆன்மீக தலங்களுக்கு வரக்கூடிய பக்தர்கள் இந்த குளத்தில் நீராடி செல்வது வழக்கம். நகரில் பெரும்பாலான தண்ணீர் தேவையை இந்த குளம் பூர்த்தி செய்கிறது. தற்போது இந்த அக்கரை குளத்தை சுற்றி கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளது. வடிகால் வசதி இல்லாததால் தண்ணீர் மாசடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. நாகை நகரில் தற்போது தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த குளத்தை சீரமைத்து நகரில் நீர் ஆதாரத்தை பெருக்கி பொதுமக்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நகர் பகுதியில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.