அதிகரிக்கும் விபத்துகளை தடுக்காவிட்டால் போராட்டம்

சேரன் நகரில் அதிகரிக்கும் விபத்துகளை தடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று பொதுமக்கள் ஆவேசமாக கூறினர்.
பொள்ளாச்சி
சேரன் நகரில் அதிகரிக்கும் விபத்துகளை தடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று பொதுமக்கள் ஆவேசமாக கூறினர்.
வளைவான பகுதி
கோவையில் இருந்து பொள்ளாச்சி நகருக்கு தினமும் அரசு மற்றும் தனியார் பஸ், கார், லாரி, இருசக்கர வாகனம் என ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. அவை கோவையில் இருந்து கிணத்துக்கடவு, வடக்கிபாளையம் பிரிவு, சேரன் நகர் வழியாக பொள்ளாச்சிக்கு வருகின்றன.
பிரதான சாலையாக உள்ள அங்கு சேரன் நகர் அருகே 100 அடி தூரம் வளைந்து செல்கிறது. இங்கு வாகனங்கள் வேகமாக வரும்போது சாலையை கடந்து செல்லும் பொதுமக்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி வருகின்றன. இவ்வாறு அந்த பகுதியில் விபத்துகள் அதிகரித்து வருகிறது.
நடவடிக்கை இல்லை
எனவே அந்த சாலையில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சப்-கலெக்டர், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் மனு அனுப்பினர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து சேரன் நகர் பொதுமக்கள் கூறியதாவது:-
சேரன் நகரில் சாலையை உமா மகேஸ்வரி நகர், லட்சுமி நகர், சுப்பையா நகர், அழகு நகர், தமிழ்மணி நகர், ஆண்டாள் நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பள்ளி-கல்லூரி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் காலை, மாலை நேரங்களில் கடந்து வருகின்றனர்.
போராட்டம் நடத்த முடிவு
அப்போது அந்த வழியாக அதிவேகமாக வரும் வாகனங்கள் மோதி உயிரிழக்கும் நிலை உள்ளது. இதற்கு தடுப்பு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை. இதனால் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து உள்ளோம். இவ்வாறு அவர்கள் ஆவேசமாக கூறினார்கள்.






