சிவகாசி ரெயில் நிலையம் முன்பு போராட்டம்


சிவகாசி ரெயில் நிலையம் முன்பு போராட்டம்
x
தினத்தந்தி 22 Sep 2022 6:45 PM GMT (Updated: 2022-09-23T00:27:54+05:30)

சென்னை- கொல்லம் ரெயில் சிவகாசி ரெயில் நிலையத்தில் நின்று செல்ல வலியுறுத்தி அனைத்து கட்சியினர் சார்பில் ரெயில் நிலையம் முன்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பி.க்கள், எம்.எல்.ஏ. உள்பட 400 பேரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர்

சிவகாசி

சென்னை- கொல்லம் ரெயில் சிவகாசி ரெயில் நிலையத்தில் நின்று செல்ல வலியுறுத்தி அனைத்து கட்சியினர் சார்பில் ரெயில் நிலையம் முன்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பி.க்கள், எம்.எல்.ஏ. உள்பட 400 பேரை போலீசார் கைது செய்தனர்.

கொல்லம் எக்ஸ்பிரஸ்

சென்னையில் இருந்து கொல்லம் செல்லும் கொல்லம் எக்ஸ்பிரஸ் தினமும் நள்ளிரவு 1.30 மணிக்கு சிவகாசியை கடந்து செல்கிறது. ஆனால் இந்த ரெயில் சிவகாசி ரெயில் நிலையத்தில் நிற்பது இல்லை. இதனால் சிவகாசிக்கு வரும் ரெயில் பயணிகள் விருதுநகரில் இறங்கியும், ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று அங்கிருந்து திரும்பியும் வர வேண்டி இருக்கிறது.

கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயில் சிவகாசி ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க கோரி பல்வேறு அமைப்புகள் ரெயில்வே நிர்வாகத்திடம் மனு கொடுத்தது. ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் போராட்டக்குழு தொடங்கப்பட்டு முதல் கட்டமாக ரெயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

எம்.பி.க்கள்

அதன்படி நேற்று மாலை 4 மணிக்கு ரெயில் நிலையம் அருகில் அனைத்து கட்சியை சேர்ந்த சுமார் 400 பேர் திரண்டனர். மாணிக்கம் தாகூர் எம்.பி., வெங்கடேசன் எம்.பி., அசோகன் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் ரெயில் மறியல் போராட்டம் தொடங்கியது. பின்னர் அவர்கள் ஊர்வலமாக ரெயில் நிலையம் சென்றனர். அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு அவர்கள் ரெயில் நிலையம் உள்ளே செல்ல முடியாதபடி தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது.

இதனால் அவர்கள் தரையில் அமர்ந்து போராட்டம் செய்தனர். ரெயில் நிலையம் உள்ளேயும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

கைது

சுமார் 30 நிமிடம் தரையில் அமர்ந்து எம்.பி.க்கள் மாணிக்கம்தாகூர், வெங்கடேசன் மற்றும் அசோகன் எம்.எல்.ஏ., காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ராஜாஸ்ரீசொக்கர், மாநகர தலைவர் சேர்மத்துரை, வட்டார தலைவர் வைரகுமார், கவுன்சிலர் ஜி.பி.முருகன், முத்துமணி, கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த தேவா, முருகன், சுரேஷ்குமார், மக்கள் நீதி மய்யம் நாகராஜன், விடுதலைச்சிறுத்தைகள் சதுரகிரி உள்பட பலர் மத்திய அரசு, ரெயில்வே நிர்வாகத்துக்கு எதிராக கோஷம் போட்டனர். பின்னர் எம்.பி.க்கள் மாணிக்கம்தாகூர் வெங்கடேசன், அசோகன் எம்.எல்.ஏ. உள்பட 400-க்கும் மேற்பட்டவர்களை சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பாபுபிரசாந்த் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

கோஷம்

இதற்கிடையில் கொல்லத்தில் இருந்து சென்னை செல்லும் ரெயில் மாலை 5.10 மணிக்கு சிவகாசி வந்தது. அதில் மாநில மாணவர் காங்கிரஸ் தலைவர் சின்னதம்பி, மாநகராட்சி கவுன்சிலர் தங்கபாண்டியம்மாள், முன்னாள் கவுன்சிலர் கணேசன், நியாஷ் ஆகி யோர் வந்தனர். அவர்கள் ரெயில் முன் அமர்ந்தும், தண்டவாளத்தில் படுத்தும் போராட்டம் செய்தனர். இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் அவர்களை அங்கிருந்து அகற்ற உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக அங்கிருந்து அகற்றினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story