சென்னையில் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம்


சென்னையில் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம்
x

சென்னையில் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்த ஜாக்டோ-ஜியோ சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி

திருச்சியில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தில் ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாநில உயர்மட்டக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதையடுத்து ஜாக்டோ- ஜியோவின் அடுத்த கட்ட போராட்ட அறிவிப்பு குறித்து மாநில ஒருங்கிணைப்பாளர்கள் வெங்கடேசன், தாஸ், தியாகராஜன் உள்ளிட்டோர் கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த பிப்ரவரி மாதம் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தினோம். அதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. பின்னர் கடந்த 24-ந் தேதியன்று வட்டார, மாவட்ட தலைநகரங்களில் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தினோம். இந்த 3 கட்ட போராட்டத்திற்கு பின்னரும் எங்களின் கோரிக்கைகளுக்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. எங்கள் கோரிக்கைகளை தமிழக நிதி அமைச்சர் புறக்கணிக்கிறார். கார்ப்பரேட் முதலாளித்துவ சிந்தனையுடன் நிதித்துறை இருப்பதால் எங்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்படுகிறது.

புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து, அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகிறோம். மேலும் பட்ஜெட்டில் தொடர்ச்சியாக அரசு ஊழியர், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் உள்ள தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் வருகிற 7, 8, 9-ந் தேதிகளில் ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், அனைத்து எம்.எல்.ஏ., எம்.பி.க்களை சந்தித்து மனு கொடுப்பது. மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அமைச்சர்களையும், அனைத்து கட்சி தலைவர்களையும் சந்தித்து மனு கொடுப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் பட்ஜெட்டில் 20-க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற 11-ந்தேதி ஜாக்டோ-ஜியோ சார்பில் சென்னையில் கோட்டை முற்றுகை போராட்டம் நடைபெறும். இந்த போராட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் கலந்து கொள்கின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story