திருமங்கலம் அரசு ஓமியோபதி கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
விருதுநகருக்கு மாற்றும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருமங்கலம் அரசு ஓமியோபதி கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருமங்கலம்,
விருதுநகருக்கு மாற்றும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருமங்கலம் அரசு ஓமியோபதி கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீர்பிடிப்பு பகுதி
மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு ஓயோபதி கல்லூரி 40 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது. இதில் 250 மாணவ -மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தக் கல்லூரி நீர்பிடிப்பு பகுதியில் அமைந்துள்ளது. இதனால் மழைக் காலங்களில் கட்டிடங்களை வெள்ளம் சூழ்ந்து கல்லூரிக்குள் மாணவர்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.
இந்தநிலையில் தற்போது பெய்த மழையால், வெள்ளம் சூழ்ந்ததால் அரசு ஓமியோபதி மருத்துவக்கல்லூரி மாணவ-மாணவிகளை தற்காலிகமாக விருதுநகர் மருத்துவக் கல்லூரிக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. விருதுநகர் மருத்துவக் கல்லூரியில் இடம் இல்லாததால் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் ஒரு தளம் மட்டுமே ஒதுக்கப்பட்டது. இதற்கு மாணவ-மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
உள்ளிருப்பு
இந்தநிலையில் விருதுநகருக்கு மாணவ-மாணவிகளை அனுப்ப கல்லூரி நிர்வாகம் முடிவு செய்ததால் 250-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் அரசு ஓமியோபதி கல்லூரி வளாகத்தில் நிர்வாக அலுவலகம் முன்பு அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கல்லூரி முதல்வர், ஆர்.டி.ஓ., தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் உடன்படாமல் மாணவ-மாணவிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ -மாணவிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் மாவட்ட கலெக்டர் மற்றும் ஓமியோபதி இயக்குனர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி மாணவர்களிடம் விளக்கம் அளித்தார். நீண்ட நேரத்துக்கு பின்பு மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.