ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்


ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
x

ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம்

ஆக்கிரமிப்பு வீடுகள்

காஞ்சீபுரம் மாவட்டம் ஆதனூர் ஊராட்சிக்குட்பட்ட லட்சுமிபுரம் பகுதியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு அரசு நிலம் என்று நினைத்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 160-க்கும் மேற்பட்ட வீடுகளை கட்டி குடும்பத்துடன் குடியிருந்து வருகின்றனர். இந்த நிலையில் பொதுமக்கள் வீடுகள் கட்டியுள்ள 12 ஏக்கர் 67 சென்ட் நிலப்பரப்பு தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.

இதனையடுத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களை அகற்றுவதற்கு வருவாய் துறை அதிகாரிகள் முயன்ற போது அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு குன்றத்தூர் தாசில்தார் ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ் அமுதனுக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

அதில் ஆதனூர் லட்சுமிபுரம் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 150 வீடுகளை அகற்ற போகிறோம் நீங்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆதனூர் லட்சுமிபுரம் பகுதி மக்களை ஸ்ரீபெரும்புதூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வ பெருந்தகை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவர் தனியார் நிறுவனத்திடம் பேசி சுமூகமான தீர்வு காணப்படும் என்று பொதுமக்களிடம் உறுதியளித்திருந்தார்.

பொக்லைன் எந்திரம் சிறைபிடிப்பு

இந்த நிலையில் நேற்று குன்றத்தூர் தாசில்தார் தலைமையில் வருவாய் துறையினர் ராட்சத பொக்லைன் ஏந்திரத்துடன் ஆதனூர் லட்சுமிபுரம் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றுவதற்காக வந்தபோது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து லட்சுமிபுரம் பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் பொக்லைன் எந்திரத்தை சிறை பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பொதுமக்கள் ஆதனூர் லட்சுமிபுரம் பிரதான சாலையில் நடுவில் 3 பந்தல்களை அமைத்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொக்லைன் ஏந்திரம் ஊருக்குள் வர முடியாமல் திரும்பி சென்றது.

இதனை தொடர்ந்து ஆக்கிரமிப்பு வீடுகளில் மின் இணைப்பு துண்டிப்பதற்காக வந்த மின் வாரிய ஊழியர்கள் மற்றும் ஆக்கிரமிப்பு அகற்ற வந்த வருவாய் துறை அதிகாரிகளிடம் லட்சுமிபுரம் பகுதி பொதுமக்கள் ஐகோர்ட்டில் இந்த இடம் சம்பந்தமாக நாங்கள் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளோம், இதில் நாங்கள் குடியிருக்கும் லட்சுமிபுரம் பகுதியில் எந்த விதமான செயல்களிலும் ஈடுபடக்கூடாது என்றும், தற்போது உள்ள நிலைமையே தொடர வேண்டும் என்று ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது. ஆகவே நீங்கள் ஐகோர்ட்டை மீறி ஏன் நாங்கள் குடியிருக்கும் வீடுகளை அகற்றுவதுற்காக வந்தீர்கள் என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் மின் வாரிய ஊழியர்கள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் திரும்பி சென்றனர். இதனால் ஆதனூர் லட்சுமிபுரம் பகுதியில் பரபரப்பு நிலவியது.


Next Story