வருங்கால வைப்புநிதி குறைதீர்வு கூட்டம்
வேலூர் அருகே வருங்கால வைப்புநிதி குறைதீர்வு கூட்டம் நடந்தது. இதில் 18 பேர் மனு அளித்தனர்.
மத்திய தொழிலாளர் அமைச்சகம் அனைத்து மாவட்டங்களிலும் வருங்கால வைப்புநிதி உங்கள் அருகில்-2.0 நிகழ்ச்சியை ஒவ்வொரு மாதமும் 27-ந் தேதி நடத்தவும், இதனை வருங்கால வைப்புநிதி உறுப்பினர்கள், தொழிலதிபர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோரின் குறைதீர்வு கூட்டம் மற்றும் சேவை வழங்கும் தளமாகவும், தகவல் பரிமாற்ற அமைப்பாகவும் செயல்படுத்தவும் அறிவுறுத்தி உள்ளது.
அதன்படி வேலூர் மாவட்டத்தில் இந்த மாதத்துக்கான (ஜூன்) வருங்கால வைப்புநிதி உங்கள் அருகில்-2.0 நிகழ்ச்சி வேலூரை அடுத்த அப்துல்லாபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு வேலூர் மண்டல வருங்கால வைப்புநிதி செயல் அலுவலர் கல்பனா தலைமை தாங்கினார். இதில் வருங்கால வைப்புநிதி உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர், தொழிலதிபர்கள், அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு தங்களது குறைகள், கோரிக்கைகளை தெரிவித்தனர். நிகழ்ச்சியில் வருங்கால வைப்புநிதி, ஓய்வூதியம், காப்பீடு உள்ளிட்ட பிரிவுகளில் பெயர், பிறந்ததேதி மாற்றம் செய்வது, பணப்பலன்கள் பெறுவது தொடர்பாக 18 மனுக்கள் பெறப்பட்டன.