கல்வியை இலவசமாக வழங்குவது கட்டாயம்-மதுரை ஐகோர்ட்டு அறிவுறுத்தல


கல்வியை இலவசமாக வழங்குவது கட்டாயம்-மதுரை ஐகோர்ட்டு அறிவுறுத்தல
x

கல்வியை இலவசமாக வழங்குவது கட்டாயம் என்று மதுரை ஐகோர்ட்டு அறிவுறுத்தியது. மேலும் கல்விக்கட்டணத்தை ஒழுங்குபடுத்த எடுத்த நடவடிக்கை என்னென்ன? என்பதற்கு பதில் அளிக்க உயர்கல்வித்துறைக்கும் உத்தரவிட்டனர்

மதுரை


கல்வியை இலவசமாக வழங்குவது கட்டாயம் என்று மதுரை ஐகோர்ட்டு அறிவுறுத்தியது. மேலும் கல்விக்கட்டணத்தை ஒழுங்குபடுத்த எடுத்த நடவடிக்கை என்னென்ன? என்பதற்கு பதில் அளிக்க உயர்கல்வித்துறைக்கும் உத்தரவிட்டனர்.

கூடுதல் கட்டண வழக்கு

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயபால், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

நான் சீர்மரபினர் சமூகத்தை சேர்ந்தவன். மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட பல மடங்கு அதிகமாக வசூலித்து வருகின்றனர்.

கடந்த 2021-22-ம் ஆண்டு மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் விசாரணை நடத்தி, சட்டத்திற்கு புறம்பாக ரூ.12 லட்சம் கட்டணம் வசூலித்ததாக அறிக்கை அளிக்கப்பட்டது. இதுதொடர்பான நடவடிக்கை நிலுவையில் உள்ளன. இந்தநிலையில் 2022-23-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு முதலில் விண்ணப்பிக்குமாறும், கட்டணத்தை பிறகு செலுத்திக் கொள்ளலாம் என்பது போல் கல்லூரி முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதை எதிர்த்து கல்லூரி வளாகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. கட்டண விவகாரம் குறித்து அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் பலன் இல்லை. எனவே இந்த கல்லூரியில் தமிழக அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை வசூலித்து, மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இலவச கல்வி கட்டாயம்

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது:-

தற்போதைய சூழ்நிலையில் கல்வியை அனைவருக்கும் இலவசமாக வழங்குவது கட்டாயம். அமெரிக்கா போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகளில் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கு, அவர்களின் பின்புலத்தை பார்ப்பது இல்லை. மாணவர்களின் கல்வித்திறனையும், மதிப்பெண்ணையும் மட்டுமே கணக்கில் கொள்கிறார்கள். மாணவர்களின் கல்வி செலவுகள் அனைத்தையும் அரசாங்கமே செலுத்துகிறது.

ஆனால், இங்கு ஏழை மாணவர்கள் பஸ் நிலையத்தில் காத்திருக்கிறார்கள்.

கல்வி நிலையங்களின் உரிமையாளர்களோ விலை உயர்ந்த கார்களில் பயணிக்கிறார்கள். இந்த காட்சிகளை நாம் காண்கிறோம்.

இவ்வாறு கருத்து தெரிவித்தனர்.

உயர்கல்வித்துறை பதிலளிக்க உத்தரவு

மேலும் நீதிபதிகள், தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் கல்விக்கட்டணத்தை ஒழுங்குபடுத்த தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன? என்றும் கேள்வி எழுப்பினர்.

பின்னர் இந்த வழக்கு குறித்து தமிழக அரசின் உயர்கல்வித் துறை செயலாளர் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.


Next Story