காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு


காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு
x

காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரியலூர்

அரியலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 3 தாலுகா மருத்துவமனைகள், 39 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய இடங்களில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு ஏதேனும் காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் அவர்களாகவே மருந்து கடைகளுக்கு சென்று மாத்திரைகளை வாங்கி சாப்பிடக்கூடாது. அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு சென்று டாக்டரை அணுகி தேவையான சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தண்ணீரை சேமித்து வைக்கும் தொட்டி, ஏர் கூலர், குளிர்சாதன பெட்டியின் பின்புறம் மற்றும் பாத்திரங்களை 3 நாட்களுக்கு ஒரு முறை பிளீசிங் பவுடரை கொண்டு நன்றாக தேய்த்து சுத்தம் செய்து உலர வைத்து பிறகு தண்ணீரை நிரப்பி கொசு புகாதவாறு மூடி வைக்க வேண்டும். வீடுகளின் அருகில் உடைந்த மண்பாண்டங்கள், உரல், டயர், தேங்காய் சிரட்டைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்தி, அவைகளில் மழைநீர் தேங்கி டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தியாகாமல் விழிப்புணர்வுடன் பாதுகாத்து கொள்ள வேண்டும்.

தற்போது மழைக்காலம் தொடங்கி இருப்பதால் பொதுமக்கள் தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும். பொதுமக்கள் தங்கள் வீடு தேடி வரும் கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். காய்ச்சலால் பாதிக்கப்படும் நபர்களின் விவரங்கள் உடனடியாக பெறப்பட்டு, அப்பகுதிகளில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புகை தெளிப்பான்கள் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் டெங்கு காய்ச்சல் மற்றும் இதர காய்ச்சலில் இருந்து தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் தற்காத்துக் கொள்ள வேண்டும், என்று மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.


Next Story