தற்கொலைகளை தடுக்க மனநல ஆலோசனை வகுப்புகள்
தன் மீதும், சக மனிதர்கள் மீதும், சுற்றியுள்ள சமூகத்தின் மீதும் இருக்கும் நம்பிக்கையை முற்றிலும் இழக்கும் ஒருவர்தான், தற்கொலை முடிவை எடுக்கிறார்.
தற்கொலை எண்ணம்
அந்தநேரத்தில் சக மனிதர்களும், சுற்றியுள்ள சமூகமும் சம்பந்தப்பட்ட நபருக்கு செவிசாய்க்கும் பட்சத்தில், உடனடியாக அவர் அந்த முடிவில் இருந்து மனம் மாறிவிடுகிறார். ஆனால் தற்போது நாம் வாழும் சமூகத்தில் அதற்கான வாய்ப்பு தாமதம் ஆவதாலே தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்து விடுவதாக மனநல ஆலோசகர்கள் கூறுகிறார்கள்.
தற்கொலை எண்ணம் கொண்ட ஒருவர், அவரது நடவடிக்கைகள் மூலம் பல்வேறு வகைகளில் சுற்றியுள்ளவர்களிடம் அதை வெளிப்படுத்துவார். அதை நண்பர்களோ, உறவினர்களோ உடனே உணர்ந்து கொண்டால் அவர்களின் எண்ணங்களை மாற்றி நல்வழிப் படுத்திவிட முடியும். இன்றைய நாகரிக உலகில் அதை யாரும் கண்டுகொள்வதில்லை. இதுவும் தற்கொலை சம்பவங்கள் அதிகரிப்புக்கு, அடித்தளமாக அமைந்து விடுகிறது.
காரணங்கள்
கடன் தொல்லை, வேலை கிடைக்கவில்லை, குடும்ப பிரச்சினை, திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் ஏமாற்றம், உடல்நிலை சரியில்லை, காதல் தோல்வி, போதை பழக்கத்துக்கு அடிமை, படிப்பில் சாதிக்க முடியாத நிலை, தேர்வுகளில் தோல்வி போன்றவைகளே பெரும்பாலான தற்கொலைகளுக்கு காரணங்களாக அமைகின்றன.
ஆன்லைன் விளையாட்டில் பணம் இழப்பவர்களின் தற்கொலைகளும் தற்போது புதிதாக இணைந்து இருக்கின்றன.
தற்கொலை செய்துகொள்வதில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்து வருவதும் வருத்தம் அளிக்கக்கூடியதாக இருக்கிறது.
தற்கொலை செய்துகொள்ளும் நபர்கள் தங்களை மட்டும் காயப்படுத்திக்கொள்வதில்லை. மாறாக, அவர்களைச் சார்ந்த குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்களுக்கும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் ஏற்படும் துக்கத்தில் இருந்து மீளமுடியாமல் தவிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.
புள்ளி விவரங்கள்
தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, இந்தியாவில் ஆண்டுக்கு ஆண்டு தற்கொலைகளின் எண்ணிக்கை உயர்ந்து வருவதை காணமுடிகிறது.
கடந்த 2020-ம் ஆண்டில் 1 லட்சத்து 53 ஆயிரத்து 52 பேர் தற்கொலை செய்து கொண்டதாகவும், 2021-ம் ஆண்டு அது 1 லட்சத்து 64 ஆயிரத்து 33 ஆக உயர்ந்து இருப்பதுடன், அதில் 18 வயதுக்குட்பட்ட இளவயதினர் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இருப்பதாகவும் புள்ளிவிவரம் காட்டுகிறது.
தமிழ்நாடு 2-வது இடம்
இந்தியாவில் ஒட்டுமொத்த தற்கொலை சம்பவங்களில் தமிழ்நாடு 2-வது இடத்தில் இருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் 2021-ம் ஆண்டில் 18 ஆயிரத்து 925 பேர் தற்கொலை செய்திருக்கிறார்கள். அவர்களில் 940 பேர் மாணவர் பருவத்தில் உள்ளவர்கள் என்பது வேதனையிலும் வேதனை.
இது ஒரு புறம் இருக்க 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான புள்ளி விவரங்களைப் பார்க்கும்போது, மேலும் அதிர்ச்சியைக் கொடுக்கிறது. அதில், 10 ஆயிரத்து 692 பேர் தற்கொலை செய்து கொண்டதில், 525 பேர் மாணவச் செல்வங்களாக இருக்கிறார்கள் என்பதைக் காணும்போது மேலும் மனவலியாக இருக்கிறது.
மனநல ஆலோசனை
மாணவ சமுதாயத்தின் இதுபோன்ற தற்கொலை எண்ணங்களை தடுக்க என்னதான் செய்ய வேண்டும்? என்கிற கேள்வி நமக்குள் எழுகிறது. அந்த கேள்விக்கு பதிலாக, மனநல ஆலோசனைகள் வழங்குவதின் மூலம், அவர்களைத் தற்கொலை முடிவுகளில் இருந்து விடுவிக்க முடியும் என்கின்றனர் மனநல ஆலோசகர்கள்.
பள்ளிகளில் மனநல ஆலோசனை வகுப்புகளை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டம் ஏற்கனவே வகுக்கப்பட்டாலும், அது பெயர் அளவிலேயே இருக்கிறது. அதனை மீண்டும் முறைப்படுத்த வேண்டிய அவசியம் இப்போது எழுந்து இருக்கிறது.
இதுபற்றி ஆசிரியர்கள், பெற்றோர், மனநல ஆலோசகரிடம் கேட்டபோது அவர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-
கவுன்சிலிங் வகுப்புகள்
திருமயம் கோட்டையூரை சேர்ந்த பிளஸ்-2 மாணவி நாகலட்சுமி:- தற்போது பள்ளி மாணவ-மாணவிகள் பல்வேறு வகையில் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொள்கின்றனர். குறிப்பாக தேர்வுகளில் குறைந்த மதிப்பெண் எடுத்தாலும், தேர்வில் தோல்வி அடைந்தாலும் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுக்கிறார்கள். ஒருசிலர் தங்களது பெற்றோர் செல்போன் வாங்கி தரவில்லை என்ற அற்ப காரணத்திற்காகவும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இது மிகவும் தவறான முடிவாகும். பள்ளி மாணவ-மாணவிகள் மன தைரியத்துடன், மன உளைச்சல் இன்றி படித்து முன்னுக்கு வர வேண்டும். மேலும் பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், உடற்கல்வி போன்ற வகுப்புகளைப் போன்று மன உளைச்சலை போக்க கவுன்சிலிங் வகுப்புகள் தொடங்க வேண்டும். அப்படி செய்தால் மாணவர்கள் நன்றாக படித்து சமுதாயத்தில் நல்ல நிலைமைக்கு வருவார்கள்.
மனநிலை மாறும்
புதுக்கோட்டையை சேர்ந்த கவுரவ விரிவுரையாளர் கண்ண பிரம்ம மகேஸ்வரன்:- ''இன்றைய மாணவர்கள் மத்தியில் பொறுமை, நிதானம் என்பது அதிகம் இல்லை. தலைமுறைகள் வழியில் பார்க்கும் போது இன்றைய தலைமுறை மாணவர்களுக்கும், முந்தைய தலைமுறை மாணவர்களுக்கும் பழக்க வழக்கங்களில் நிறைய மாற்றங்கள் உள்ளன. தற்போது உளவியல் ரீதியாக பார்த்து மாணவர்களை வகைப்படுத்த வேண்டும்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் பலர் நேரடியாக மைதானத்தில் விளையாடுவதை தவிர செல்போன்களில் மூழ்கியே கிடக்கின்றனர். அவர்களுக்கு எதிர்க்கால திட்டம் நோக்கம் பற்றிய இலக்கு இல்லை. இன்றைய வேகமான உலகம், குடும்ப சூழ்நிலை போன்ற காரணங்களால் அவர்களது மனப்பக்குவம் மாறுகிறது. தங்களது கடமை, பொறுப்புணர்வை மறந்து விடுகின்றனர். பெற்றோர்களையும், வீட்டையும் அவர்கள் பொறுப்புணர்வோடு பார்ப்பதில்லை. தேவைக்காக பயன்படுத்தக்கூடியதாக பார்க்கின்றனர். அவர்களால் சில தோல்விகளை தாங்க முடியாமல் விபரீத முடிவுகளை எடுத்து விடுகின்றனர். மாணவர்களின் மனநிலை மாற வேண்டும். இதற்கு கவுன்சிலிங் மட்டும் கொடுத்தால் போதாது, அவர்களுக்கு இன்றைய பொறுப்புகள், வழிகாட்டல்கள் வேண்டும். மாணவர்களுக்கு படிப்போடு தொழிற்கல்வி சார்ந்த படிப்புகளும், மைதானத்தில் நடைபெறும் ஏதேனும் ஒரு விளையாட்டில் மாணவர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்தினால் அவர்களது மனநிலை மாறும். தவறான முடிவுகளுக்கு மனம் எழாது. இதில் நல்ல மனப்பக்குவத்தை அடைவார்கள். தற்கொலை முடிவு என்கிற எண்ணம் ஏற்படாது''.
சமூக வலைதளம்
விராலிமலையை சேர்ந்த கல்லூரி மாணவி அன்புபரமேஸ்வரி:- தற்போதுள்ள மாணவர்கள் சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். அதில் நல்ல விஷயங்கள் இருந்தாலும் அதிகமாக தவறான விஷயங்களே இருக்கும். பெரும்பாலான நேரங்களை சமூக வலைதளங்களில் செலவழிக்கும் மாணவர்கள் போதிய வழிகாட்டுதலின்றி பலரும் தவறான பாதைக்கு செல்லும் நிலை உள்ளது. இதனால் தங்களுக்கு வரும் பிரச்சினைகளை எதிர்கொள்வதில் சிரமப்பட்டு சில நேரங்களில் உயிரை மாய்த்துக்கொள்வது போன்ற தவறான முடிவை எடுத்து விடுகின்றனர். அதுமட்டுமின்றி பெற்றோர் தங்களது குடும்ப கஷ்டங்களை காரணம் காட்டி குழந்தைகளை படிக்க வற்புறுத்துவதும், பெரும்பாலான பள்ளிகளில் கூடுதல் நேரம் எடுத்து மாணவர்களை படிக்க சொல்வதும் அவர்களை மன அழுத்தத்திற்கு உட்படுத்துகிறது. தற்போது மாணவர்களுக்கு மனநல வகுப்புகள் பள்ளிக்கூடங்களில் நடத்துவது என்பது வரவேற்கத்தக்கது. காரணம் இரண்டாம் நிலை பெற்றோர்களான ஆசிரியர்களால் மட்டுமே மாணவர்களுக்கு தன்னம்பிக்கை, துணிச்சல், மன உறுதி ஆகியவற்றை அளிக்க முடியும்.
தாழ்வு மனப்பான்மை
வடகாடு பகுதியை சேர்ந்த சுதாகர்:- மாணவர்களின் குடும்ப சூழ்நிலை மற்றும் சக மாணவர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடு, குறைந்த மதிப்பெண் வாங்கும் மாணவர்களிடையே ஏற்படும் தாழ்வு மனப்பான்மை ஆகியவற்றை போக்கும் வகையில் மனநல பாடப்பிரிவு வகுப்புகள் ஒவ்வொரு பள்ளிகளிலும் தொடங்குவது சால சிறந்தது. மேலும் மாணவர்களுக்கு புரியும் வகையில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதின் மூலம் தற்கொலை போன்ற பிற சிந்தனைகள் மாணவர்கள் மனதில் எழாமல் தடுக்க முடியும்.
தற்கொலை தீர்வல்ல...
பொன்னமராவதியை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் அறிவுடைநம்பி:- தற்கொலை செய்து கொண்ட மாணவரின் தவறான முடிவால் அவரது பெற்றோர், உடன் பிறந்தவர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் இந்த சமூகத்திடம் இருந்து எதிர்க்கொள்ளும் வசைச்சொற்களும், கேள்விக்கணைகளும், இழி பேச்சுக்களும் ஏராளம். எந்த ஒரு பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வல்ல என்பதை மாணவர்கள் உணர வேண்டும். பிரச்சினை குறித்து பெற்றோரிடமும், ஆசிரியர்களிடமும் வெளிப்படையாக பேச வேண்டும். அதுவே சரியான தீர்வை வழங்க கூடியதாக இருக்கும். அதற்கான மனவலிமையையும், தன்னம்பிக்கையும் நமது கல்விமுறை அவர்களுக்கு கொடுக்க வேண்டும். தற்கொலையின் பின்விளைவுகளை உணர்ந்தால் எந்த குழந்தையும் இது போன்ற தவறான முடிவுகளை எடுக்க மாட்டார்கள். அதை உணர்த்த வேண்டியது இந்த கல்விமுறையின், இந்த சமூகத்தின் தலையாய கடமையாகும்.
ஆலோசனை வழங்க வேண்டும்
அன்னவாசலை சேர்ந்த மீராமொய்தீன்:- பள்ளியில் மாணவ- மாணவிகளின் அன்றாட செயல்பாட்டில் மாற்றம் இருந்தால் அதனை ஆசிரியர்கள் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அவர்களின் மன அழுத்தத்தை போக்க வேண்டும். எது சரி, எது தவறு, எது நிழல், எது நிஜம் என இரு பாலருக்கும் பெற்றோர் கட்டாயம் சொல்லித்தர வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், குழந்தைகள் டி.வி., சமூக வலைதளங்களை பார்த்து அதிலுள்ளவற்றை நம்பத் தொடங்கி விடுவார்கள். பெற்றோர் தங்கள் விருப்பத்தை குழந்தைகள் மீது திணிப்பதை முதலில் நிறுத்த வேண்டும். குழந்தைகளின் அறிவுத்திறனை அறிந்து அதற்கேற்ப வழிகாட்ட வேண்டும். ஆசிரியர்கள் வெறுமனே பாடத்தை மட்டும் சொல்லித்தராமல் வாழ்க்கைக்கு தேவையான ஆலோசனைகளை வழங்க வேண்டும். குறிப்பாக 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களும் வாழ்க்கையில் சாதனை படைத்திருப்பதை எடுத்துக்கூற வேண்டும். மேலும் பள்ளிகளில் மாணவர்களுக்கு மன நல வகுப்புகள் நடத்த வேண்டும். இவை நடந்தால், தற்கொலை எண்ணம் முடிவுக்கு வருவதுடன், எதிர்காலத்தை நம்பிக்கையோடு எதிர்க்கொள்ளும் மன உறுதியும் உருவாகும்.
குழந்தைகளிடம் மனம் விட்டு பேச வேண்டும்
புதுக்கோட்டை மனநல டாக்டர் அஜாய்:- ''10 முதல் 25 வயதுடையவர்கள் இளம்பருவத்தினர் ஆவார்கள். இந்த வயதில் எது நல்லது?, கெட்டது? என தெரியாமல் முடிவெடுக்க கூடியதாகும். இதனால் இந்த வயது கட்டங்களில் பள்ளி, கல்லூரிகளில் காதல் மோகம், பயம், மனஅழுத்தம் போன்றவை அதிகமாக இருக்கும். கெட்டப்பழக்கங்களும் தொடங்க கூடிய வயதாகும். குறிப்பாக 10, 11, 12-ம் வகுப்பு படிப்பவர்களுக்கு மனச்சோர்வு, மன பயம் போன்ற மனநல நோய்கள் ஏற்படும். இதனை தவிர்ப்பது எப்படி என்பது அவர்களுக்கு சரியாக தெரியாது. இந்த தலைமுறையில் இவ்வயதுடையவர்களுக்கு ஒரு பிரச்சினையை கையாளுவது எப்படி? என்பது தொடர்பான தன்னம்பிக்கை கிடையாது. இதனால் தான் தேர்வில் தோல்வி உள்பட பிற காரணங்களுக்காக தற்கொலை செய்வது அதிகரிக்கிறது.
எனவே அதனால் மாணவ பருவத்தில் இருக்கும் குழந்தைகளிடம் பெற்றோர் மனம் விட்டு பேச வேண்டும். அவன் கூறுவதை கேட்டு அவனுக்கு தகுந்தாற்போல் செயல்பட அறிவுறுத்த வேண்டும். இதேபோல் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்களும் மாணவர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை எண்ணாமல், அவர்களுக்கு தகுந்தாற்போல் பக்குவப்படுத்தி மாணவர்களை நல்வழிப்படுத்தி அறிவுரை வழங்க வேண்டும். மாணவர்களிடம் மனம்விட்டு பேசி குறைகளை கேட்க வேண்டும். இதேபோல் மாணவர்களும், பெற்றோரிடம் கூற முடியாததை தங்களது நண்பர் மற்றும் வகுப்பு ஆசிரியர்களிடம் மனம் விட்டு கூறலாம். இதில் ஒரு தீர்வு கிடைக்கும். அதனால் எந்தவொரு நிலையிலும் தற்கொலை என்ற முடிவை கையில் எடுக்க கூடாது. தற்கொலை முடிவு என்பது இந்த வயதிற்குடையவர்களுக்கு மட்டுமில்லை. எந்த வயதினரும் எடுக்க வேண்டாம்''.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.