நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை


நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை
x

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முற்றுகை போராட்டம்

நெல்லை மாநகராட்சி வாராந்திர குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மேயர் பி.எம்.சரவணன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ, செயற்பொறியாளர் பாஸ்கர், சுகாதார அதிகாரி சரோஜா, உதவி செயற்பொறியாளர்கள் லெனின், பைஜூ, உதவி ஆணையாளர்கள் ஜஹாங்கீர் பாட்சா, வெங்கட்ராமன், காளிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். 14-வது வார்டு ஊருடையார்புரம் பொதுமக்கள் தமிழர் விடுதலைக்களம் மாவட்ட செயலாளர் முத்துக்குமார் தலைமையில் நேற்று மாநகராட்சி அலுவலகத்திற்கு காலிக்குடங்களுடன் வந்து தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே அவர்களுடன் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஊருடையார்புரம் பகுதியில் பொதுப்பயன்பாட்டில் உள்ள கழிப்பிடங்களை உடனடியாக சீரமைக்க வேண்டும். நதிபுரம் பகுதியில் நீண்ட நாட்களாக நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கி சீராக குடிநீர் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அப்போது பொதுமக்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மேயரை சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்தனர். கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால் மாநகராட்சி அலுவலகத்தில் ஆமை விடும் போராட்டம் நடத்துவோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

வாக்குவாதம்

பாளையங்கோட்டை தியாகராஜநகர் 55-வது வார்டு பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்களது வார்டுக்குட்பட்ட 5-வது தெற்கு தெருவில் குடிநீர் வழங்கக்கோரி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மனு கொடுத்தோம். அப்போது 2 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை தண்ணீர் வழங்கப்படவில்லை. எனவே சீரான குடிநீர் வழங்க நிரந்தர தீர்வு வழங்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

அப்போது மனு கொடுக்க வந்த பெண், நீங்கள் மேயர் சொல்லும்போது சரிசெய்வதாக கூறுகிறீர்கள். ஆனால் எங்கள் பகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வருவதில்லை என்று கூறி உதவி ஆணையாளர்கள் காளிமுத்து, வெங்கட்ராமன் ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவரை அதிகாரிகள் சமரசம் செய்தனர்.

சந்திப்பு பஸ்நிலையம்

மனிதநேய ஜனநாயக கட்சியினர் மாவட்ட செயலாளர் நிஜாமுதீன் தலைமையில் மாநகராட்சிக்கு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டு வரும் நெல்லை சந்திப்பு பஸ்நிலைய பணிகள் இன்னும் முடிவடையாமல் தாமதமாவது ஏன்? பொதுமக்கள், பயணிகளின் நலன் கருதி உடனடியாக சந்திப்பு பஸ்நிலையத்தை திறக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். முன்னதாக கோரிக்கையை வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தச்சநல்லூர் மண்டல பகுதியில் பாதாள சாக்கடை பணி நிறைவடைந்துள்ள இடங்களில் புதிய தார்சாலை அமைத்து தர வேண்டும் என்று இந்து வியாபாரிகள் நலச்சங்கத்தினர் மனு கொடுத்தனர்.

மேலப்பாளையம் 47-வது வார்டுக்கு கூடுதல் தூய்மை பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று கூறி கவுன்சிலர் ஷபிஅமீர்பாத்து மனு கொடுத்தார்.


Next Story