நெல்லை டவுனில் பொதுமக்கள் சாலை மறியல்
நெல்லை டவுன் பகுதியில் பொதுமக்கள் நேற்று திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர்.
நெல்லை டவுன் பகுதியில் பொதுமக்கள் நேற்று திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர்.
குடிநீரில் சாக்கடை
நெல்லை மாநகராட்சி 23-வது வார்டுக்கு உட்பட்ட பகத்சிங் தெரு, ஜெயபிரகாஷ் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக குடிநீருடன் சாக்கடை கலந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
இதுதொடர்பாக அந்த பகுதி மக்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு போராட்டம் நடத்தினர். அப்போது மாநகராட்சி அதிகாரிகள் விரைவில் சுகாதாரமான நீர் வழங்கப்படும் என தெரிவித்தனர். ஆனால் தொடர்ந்து குடிநீருடன் சாக்கடை கலந்து வந்துள்ளது.
சாலை மறியல்
இதனை கண்டித்து நேற்று காலையில் அந்த பகுதி மக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் டவுன் காட்சி மண்டபத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த டவுன் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது 3 நாட்களுக்குள் சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதியளித்தனர். பின்னர் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் மதியம் மாநகராட்சி சார்பில் அந்த பகுதிகளுக்கு டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டது.