குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்


குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x

குடிநீர் வழங்கக்கோரி சுகுணாபுரத்தில் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோயம்புத்தூர்


குடிநீர் வழங்கக்கோரி சுகுணாபுரத்தில் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மதுக்கரை நகராட்சி

கோவை மதுக்கரை நகராட்சி 4-வது வார்டுக்கு உட்பட்ட அறிவொளி நகர், காமராஜ் நகர், சமத்துவ நகர் ஆகிய பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி பொதுமக்களுக்கு கடந்த 3 வாரமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் அதிகாரிகளிடம் பல முறை புகார் தெரிவித்தனர்.

இருப்பினும் அந்த பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் நேற்று காலை தங்களுக்கு சீராக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி கோவை-பாலக்காடு சாலையில் உள்ள சுகுணாபுரம் பஸ் நிறுத்தம் அருகே திடீரென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்காரணமாக அந்த சாலையில் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

பேச்சுவார்த்தை

சாலை மறியல் குறித்து தகவல் அறிந்ததும் மதுக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் வைரம், சப்-இன்ஸ்பெக்டர் கவியரசு மற்றும் போலீசார், மதுக்கரை நகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறியதாவது:-

நாங்கள் குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்டு உள்ள வீடுகளில் வசித்து வருகிறோம். எங்கள் பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு 20 நாட்களை கடந்து விட்டது. இதனால் காசு கொடுத்து குடிநீர் வாங்க வேண்டிய நிலை உள்ளது. எங்கள் பகுதிக்கு முறையாக குடிநீர் வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகம், மதுக்கரை மாநகராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இந்த பகுதியில் எங்களுக்கு எவ்வித அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை. எனவே எங்களுக்கு சீரான இடைவெளியில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

இதையடுத்து உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக அதிகாரிகள் உறுதி மொழி அளித்ததை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


Next Story