குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

மயிலாடுதுறை அருகே குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மயிலாடுதுறை அருகே குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குடிநீர் வழங்கவில்லை
மயிலாடுதுறை அருகே பட்டமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கீழ பட்டமங்கலம் பகுதியில் வடக்கு தெரு மற்றும் தெற்கு தெருவில் கடந்த 3 மாதத்திற்கு மேலாக முறையாக குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கவில்லை. மேலும் கடந்த 3 தினங்களாக லாரிகள் மூலமாக வழங்கப்பட்ட குடிநீரும் வழங்கப்படாமல் நிறுத்தப்பட்டது.
இதனை கண்டித்து மயிலாடுதுறை- திருவாரூர் சாலை சீனிவாசபுரம் மெயின் ரோட்டில் அப்பகுதி மக்கள் நேற்று காலை திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
இதுகுறித்து தகவல் அறிந்து மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையிலான போலீசார் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் மயிலாடுதுறை- திருவாரூர் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






