காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
குடிநீர் வழங்காததை கண்டித்து காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆலங்குடி:
குடிநீர் இல்லாமல் அவதி
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் ஒன்றி யத்துக்குட்பட்ட பாச்சிக்கோட்டை ஊராட்சி பாப்பான்விடுதியில் சுமார் 500-க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த 20 நாட்களுக்கு மேலாக மின் மோட்டார் பழுதால் அப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
பாப்பான்விடுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் அங்கன்வாடி உள்ளது. இங்குள்ள மாணவர்களுக்கு கடந்த 20 தினங்களுக்குமேல் குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
சாலை மறியல்
இந்நிலையில், குடிநீர் வழங்காத ஊராட்சியை கண்டித்து பொதுமக்கள் மற்றும் பெண்கள் காலிக்குடங்களுடன் ஆலங்குடி-கறம்பக்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு தீபக் ரஜினி, சப்-இன்ஸ்பெக்டர்கள் கலைச்செல்வன், நதியா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லவில்லை. மேலும் மறியலில் ஈடுபட்டவர்கள் ஆணையர் மற்றும் அரசு அதிகாரிகள் வந்து எங்களுக்கு முடிவு கூறும் வரை நாங்கள் சாலை மறியலை கைவிட போவதில்லை என்று கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதையடுத்து அங்கு வந்த திருவரங்குளம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜோதியம்மாள், வருவாய் ஆய்வாளர் துரைக்கண்ணு, ஊராட்சி செயலர் முத்துக்குமார் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். வருகிற 26-ந்தேதிக்குள் குடிநீர் பிரச்சினை சரி செய்யப்படும் என்று அதிகாரிகள் கூறியதையடுத்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் கறம்பக்குடி-ஆலங்குடி சாலையில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.